குஜராத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கு - 38 பேரின் மரண தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்

56 பேர் உயிரிழந்தனர். 246 பேர் காயமடைந்தனர்.
குற்றவாளிகள்
குற்றவாளிகள்
Published on

2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 குற்றவாளிகளுக்கு சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரண தண்டனையை குஜராத் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும் 11 பேருக்கு ஆயுள் தண்டனையையும் உறுதி செய்துள்ளது.

மேலும் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 5 லட்சமும், லேசான காயங்களுடன் உயிர்தப்பியவர்களுக்கு ரூ. 1 லட்சமும் 2027 மார்ச் 31க்குள் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குண்டுவெடிப்பு

2008, ஜூலை 26, அகமதாபாத்தின் பல பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த குண்டுவெடிப்புகளில் 56 பேர் உயிரிழந்தனர். 246 பேர் காயமடைந்தனர்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு சூரத் நகரில் வெடிக்காத குண்டுகளை காவல்துறை கண்டெடுத்தது. இந்தச் சம்பவங்களில் பதிவு செய்யப்பட்ட 35 வழக்குகளும் ஒரே விசாரணையாக எடுத்துக்கொள்ளப்பட்டன.

விசாரணையின் போது நூற்றுக்கும் மேற்பட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். மேலும் 78 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கு

இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் முன்னாள் தலைவர் சப்தர் நாகோரியும் குற்றவாளிகளில் ஒருவராக இருந்தார்.

அவருடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து 'இந்திய முஜாஹிதீன்' என்ற அமைப்பை உருவாக்கி இந்த தாக்குதலுக்கு மூளையாக செய்ல்பபட்டுள்ளார் என காவல்துறை தெரிவித்தது.

இந்த வழக்கின் விசாரணை பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. ஒன்பது நீதிபதிகள் முன்னிலையில் 1,163 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

பிப்ரவரி 2022ல், சிறப்பு நீதிமன்றம் 49 பேரைக் குற்றவாளிகளாக அறிவித்து, 28 பேரை விடுவித்தது. முக்கிய குற்றவாளிகள் 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர்கள் செய்த மேல்முறையீட்டில் குஜராத் உயர்நீதிமன்றம் அவர்களின் தண்டனையை உறுதி செய்துள்ளது.

2002ஆம் ஆண்டு கோத்ரா கலவரத்திற்குப் பழிவாங்கும் விதமாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக, குண்டுவெடிப்புகளுக்கு பிறகு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டிருந்தது முந்தைய வழக்கு விசாரணையின் சுட்டிக்காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com