ஊறுகாய் தராததால் ஆத்திரம்: தோழியை கத்தியால் குத்திய 9-ஆம் வகுப்பு மாணவி! குஜராத்தில் அதிர்ச்சி!

"தாக்குதலில் ஈடுபட்ட இரு மாணவிகளும் வெறும் 10 நாட்களுக்கு முன்புதான் இந்த ஆசிரமப் பள்ளியில் சேர்ந்துள்ளனர்."
9th-grade girl stabs her friend
Published on

தாபி மாவட்டத்தின் வலோட் பகுதியில் உள்ள அம்பாக் கிராமத்தில் பழங்குடியின மாணவர்களுக்கான அரசு நிதியுதவி பெறும் 'ஆசிரமப் பள்ளி' ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கிப் படிக்கும் 15 வயதுடைய இரண்டு மாணவிகளுக்கு இடையே தான் இந்த வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தன்று இரவு, பள்ளியின் சாப்பாட்டுக் கூடத்தில் மாணவிகள் அனைவரும் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மாணவி சாதம் வாங்குவதற்காக எழுந்துள்ளார். உடனே அவரது தோழியான மற்றொரு மாணவி, அருகில் இருந்த மேஜையிலிருந்து தனக்கு ஊறுகாய் பாட்டிலை எடுத்து வருமாறு கேட்டுள்ளார். ஆனால், அந்த மாணவி ஊறுகாய் எடுத்துத் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவி, சாப்பாட்டு மேஜையில் இருந்த கத்தியை மறைத்து எடுத்துக்கொண்டு, சாப்பிட்டு முடித்துவிட்டு கைகழுவச் சென்ற அந்த மாணவியைப் பின்தொடர்ந்து குளியலறைக்குச் சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த மாணவியின் கழுத்தை நெரிக்க முயன்றதோடு, கத்தியால் அவரது கைகளிலும் உடலிலும் கொடூரமாகக் குத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவியின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த விடுதி காப்பாளர் மற்றும் பள்ளி ஊழியர்கள், ரத்த வெள்ளத்தில் இருந்த மாணவியை மீட்டு உடனடியாக சூரத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அம்மாணவியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், வலோட் காவல் நிலைய போலீசார் 'கொலை முயற்சி' பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தாக்குதல் நடத்திய 15 வயது மாணவியைக் கைது செய்த போலீசார், அவரை வதோதராவில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்ட இரு மாணவிகளும் வெறும் 10 நாட்களுக்கு முன்புதான் இந்த ஆசிரமப் பள்ளியில் சேர்ந்துள்ளனர் என்றும், அவர்களுக்குள் பெரிய அளவில் எந்தப் பகையும் இல்லாத நிலையில், ஊறுகாய்க்காக இப்படி ஒரு கொடூரமான தாக்குதல் நடந்திருப்பது தங்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளதாகவும் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com