search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    7 ஐகோர்ட்டு நீதிபதிகளின் சம்பளம் முடக்கம்- உடனடியாக விடுவிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
    X

    7 ஐகோர்ட்டு நீதிபதிகளின் சம்பளம் முடக்கம்- உடனடியாக விடுவிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    • வைப்புநிதி பெற தகுதி இருப்பதாக 7 நீதிபதிகளும் உரிமை கோரினர்.
    • 7 நீதிபதிகளும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    புதுடெல்லி:

    பாட்னா ஐகோர்ட்டு நீதிபதிகள் சைலேந்திர சிங், அருண்குமார் ஜா, ஜிதேந்திர குமார், அலோக்குமார், சுனில் தத்தா மிஸ்ரா, சந்திரபிரகாஷ் ஜெயின், சந்திரசேகர் ஜா ஆகியோர் மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றி ஐகோர்ட்டு நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றவர்கள் ஆவர்.

    அவர்கள் ஐகோர்ட்டு நீதிபதிகளாக ஆனவுடன், அவர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதி பெற தகுதியில்லை என்று அவர்களது பொது வருங்கால வைப்புநிதி கணக்குகள் முடித்துக் கொள்ளப்பட்டன.

    ஆனால், தங்களுக்கு வைப்புநிதி பெற தகுதி இருப்பதாக 7 நீதிபதிகளும் உரிமை கோரினர். கடந்த டிசம்பர் 13-ந் தேதி அவர்களது கோரிக்கையை மத்திய சட்ட அமைச்சகம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது.

    7 நீதிபதிகளின் சம்பளம் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டது.

    இதை எதிர்த்து 7 நீதிபதிகளும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த மாதம் 24-ந் தேதி மனுக்கள் விசாரணைக்கு வந்தன. கோரிக்கையை பரிசீலிக்குமாறு மத்திய அரசை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

    இந்தநிலையில், நேற்று இம்மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தன. இடைக்கால நடவடிக்கையாக, 7 நீதிபதிகளின் சம்பளத்தையும் அவர்களுக்கு விடுவிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    மத்திய சட்ட அமைச்சகம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட டிசம்பர் 13-ந் தேதிக்கு முந்தைய நிலை அடிப்படையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்தது. அடுத்தகட்ட விசாரணை 27-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

    Next Story
    ×