

உத்தரபிரதேச மாநிலம் காசிபாத்தின் நந்தகிராம் பகுதியை சேர்ந்த ஒரு கூலி தொழிலாளி, தனது 2 மகன்கள் மற்றும் 4 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவரது மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவரை பிரிந்து சென்றுவிட்டார்.
இந்தநிலையில் சிறுமி வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் 24 வயது வாலிபர் ஒருவர் அங்கு வந்து சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றார்.
இந்த நிலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த தொழிலாளி தனது மகளை காணாமல் தேடினார். எங்கு தேடியும் கிடைக்காததால் அருகில் இருந்த சிறுவர்களிடம் விசாரித்தார். அவர்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் வாலிபர் சிறுமியை கடைக்கு அழைத்து செல்வதாக கூறி சென்றார் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து கடைக்கு சென்று தேடினார். அங்கும் அவர்களை காணாததால் தனது உறவினர்கள் உதவியுடன் அப்பகுதி முழுவதும் தேடினார். வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் சிறுமி படுகாயங்களுடன் கிடந்தார்.
உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த அறிக்கையின்படி, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளார். சிறுமியின் பிறப் புறுப்புகளைச் சுற்றி ரத்தக் காயங்கள் உள்ளன. மேலும் கல்லால் தலையில் தாக்கிய காயமும் இருந்தது. தலையில் ஏற்பட்ட காயமே மரணத்திற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த வாலிபரை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை வாலிபர் ஒப்புக்கொண்டார். அவர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வாலிபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.