என் மலர்tooltip icon

    இந்தியா

    கோழிக்கோடு விமான நிலையம் அருகே 4 பஸ்கள்-ஆம்புலன்சு தீப்பிடித்து எரிந்தன - போலீசார் விசாரணை
    X

    கோழிக்கோடு விமான நிலையம் அருகே 4 பஸ்கள்-ஆம்புலன்சு தீப்பிடித்து எரிந்தன - போலீசார் விசாரணை

    • வாகனங்களில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.
    • பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனங்கள் எப்படி தீப்பிடித்து எரிந்தன? என்பது மர்மமாக உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி, கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் இருக்கின்றன. இங்கிருந்து பல்வேறு வெளிநாடுகள் மற்றும் முக்கிய நகரங்களுக்கு நேரடி விமான சேவைகள் இருக்கின்றன.

    கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம், நகரத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் கரிப்பூர் என்ற இடத்தில் உள்ளது. இங்கிருந்து துபாய், அபுதாபி, தோஹா உள்ளிட்ட நாடுகளுக்கும், சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கும் நேரடியாக விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    கேரள மாநிலத்தில் பரபரப்பாக இயங்கக்கூடிய விமான நிலையத்தில் ஒன்றாக கோழிக்கோடு விமான நிலையம் உள்ளது. இந்தநிலையில் இந்த விமான நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த 4 பஸ்கள் மற்றும் ஒரு ஆம்புலன்சு வாகனம் உள்ளிட்டவைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன.

    வாகனங்களில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. விமான நிலையம் அருகில் என்பதால் விமான சேவையில் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து உடனடியாக மஞ்சேரி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்களில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அவர்கள் அதிநவீன தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டன.

    தீயை அணைக்கும் பணியில் உள்ளூர்வாசிகள் மற்றும் அதிகாரிகளும் ஈடுபட்டனர். இருந்த போதிலும் 4 பஸ்கள் மற்றும் ஆம்புலன்சு உள்ளிட்ட 5 வாகனங்களும் முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமாகின. விமான நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் எப்படி தீப்பிடித்து எரிந்தன? என்பது தெரியவில்லை.

    தீப்பிடித்த 4 பஸ்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பு விமான நிலையத்தில் இருந்து முனையத்திற்கும், முனையத்தில் இருந்து விமான நிலையத்தில் உள்ள விமானத்திற்கும் பயணிகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டவை ஆகும். அந்த வாகனத்தை இயக்கிய நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிவடைந்ததால் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள காலியிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனங்கள் எப்படி தீப்பிடித்து எரிந்தன? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசாரும், விமான நிலைய அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    பஸ்களுக்கு யாரேனும் மர்மநபர்கள் தீ வைத்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது. அதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அசம்பாவித செயலில் ஈடுபட்ட நபர்களை கண்டு பிடிக்க, விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். விமான நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்கள் மற்றும் ஆம்புலன்சு வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×