முடிந்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வாருங்கள்- பாஜகவுக்கு கமல்நாத் சவால்

தைரியம் இருந்தால் எங்கள் அரசுக்கு எதிராக பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம் என மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் சவால் விடுத்துள்ளார்.
கமல்நாத்
கமல்நாத்
Published on

போபால்:

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்து வந்த ஜோதிராதித்ய சிந்தியா கடந்த 10-ந் தேதி கட்சியில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் இணைந்தார். அவரது ஆதரவாளர்களாக இருந்து வந்த 6 மந்திரிகள் உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தும்படி கமல்நாத்துக்கு கவர்னர் உத்தரவிட்டார். அதன்படி பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கவர்னர் உரையாற்றிய பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என பாஜக எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். 

ஆனால்,  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் சட்டசபை 26-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

பின்னர்  முதல்வர் கமல்நாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எங்களுக்கு மெஜாரிட்டி இல்லை எனக் கூறும் பாஜகவுக்கு தைரியம் இருந்தால் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம் என்றார். 

‘நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வராமல் அவர்கள் ஏன் ஒதுங்ககிறார்கள்? நாங்கள் எங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம்’ என்றும் கமல்நாத் கூறினார்.

இதற்கிடையே பாஜக எம்எல்ஏக்கள் 106 பேரும் கவர்னர் மாளிகை சென்று கவர்னர் லால்ஜி தாண்டரை சந்தித்தனர். அப்போது, உடனடியாக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடும்படி வலியுறுத்தினர். பாஜகவுக்கு மெஜாரிட்டி இருப்பதாக சிவராஜ் சிங் சவுகான் கூறினார். 

மத்திய பிரதேச சட்டசபையில் பாஜகவுக்கு 107 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com