பிரதமர் மோடிக்கு கருப்பு சட்டையுடன் எதிர்ப்பை காட்ட வேண்டும்- மு.க. ஸ்டாலின்

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு துக்க நாளாக அனுசரித்து அனைவரும் கருப்பு சட்டை அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்து நமது எதிர்ப்பை காட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மன்னார்குடி அருகே உள்ள கோட்டூரில் ஸ்டாலின் பேசிய போது எடுத்த படம்.
மன்னார்குடி அருகே உள்ள கோட்டூரில் ஸ்டாலின் பேசிய போது எடுத்த படம்.
Published on

மன்னார்குடி:

டெல்டா பகுதிகளில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணம் நடத்தி வருகிறார். நேற்று 4-வது நாளான பயணம் திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கியது.

மாலையில் கோட்டூர் பகுதியில் மு.க.ஸ்டாலின் விவசாயிகள் மத்தியில் பேசினார். அதில் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் ஊழல், லஞ்சம் தலை விரித்தாடுகின்றது. நாட்டை பற்றி மக்களைப் பற்றி சிந்திக்காத ஆட்சியாக தமிழக ஆட்சி நடக்கிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால் இந்த ஆட்சி தொடருமா? என கேள்விக்குறியோடு ஒவ்வொரு நாளும் ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பின்னர் இந்த ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிடும். ஆட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. ஆட்சிக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை கூடுதலாக ஒன்றிரண்டு மட்டுமே வைத்துள்ளனர்.

இந்த நிலையில்தான் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. அதனால் தான் தமிழக மக்கள் பிரதமர் மோடியை நம்பவில்லை. எடப்பாடி பழனிசாமியை நம்பவில்லை. எதிர்க்கட்சிகள் உங்களை (மக்களை) நம்பி வந்திருக்கின்றோம். எனவே இந்த பயணத்துக்கு பக்கபலமாக அனைவரும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து நேற்று இரவு திருத்துறைப்பூண்டியில் பொதுக்கூட்டத்துடன் மு.க.ஸ்டாலின் காவிரி பயணம் நிறைவடைந்தது. அங்கு நடந்த பொது கூட்டத்தில் விவசாயிகள் மத்தியில் அவர் பேசியதாவது:-

பிரதமர் மோடி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழகத்திற்கு வஞ்சகம் செய்து விட்டார். நாளை (12-ந்தேதி) தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு துக்க நாளாக அனுசரித்து அனைவரும் கருப்பு சட்டை அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்து நமது எதிர்ப்பை காண்பிக்க வேண்டும்.

இந்த அரசு எங்களை கைது செய்ய உள்ளதாக தகவல் வந்துள்ளது. நான் கைது ஆனாலும் நீங்கள் போராட்டத்தை தொடருங்கள். நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து இன்று 5-வது நாளாக நாகை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் காவிரி மீட்பு பயணம் மேற்கொண்டுள்ளார். நாகை மாவட்டம் பரவையில் இன்று காலை பயணம் தொடங்கியது.

அப்போது பரவையில் உள்ள மார்க்கெட்டிற்கு மு.க.ஸ்டாலின் சென்று அங்கு வியாபாரிகளை சந்தித்து பேசுகிறார்.

அதைத் தொடர்ந்து பாப்பா கோவில், சிக்கல், காரைக்கால், பொறையார், செம்பனார் கோவில் ஆகிய பகுதிகளின் வழியே சென்று மயிலாடுதுறையில் இன்று இரவு நிறைவு செய்கிறார்.

நாளை (12-ந்தேதி) காலை வைத்தீஸ்வரன் கோவில் பகுதிகளில் காவிரி உரிமை மீட்பு பயணத்தை மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார்.

பின்னர் சீர்காழி, கொள்ளிடம், வல்லம் படுகை செல்கிறார். அதன் பின் சிதம்பரம், புவனகிரி வழியாக கடலூர் செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் பேசுகின்றனர். #Cauverymanagementboard #MKStalin

X

Maalai Malar
www.maalaimalar.com