தமிழக அரசு பற்றி குறைகூறுவதை பொன்.ராதாகிருஷ்ணன் நிறுத்த வேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் பற்றி ஊடகங்கள் மூலம் குறைகூறுவதை பொன்.ராதாகிருஷ்ணன் நிறுத்த வேண்டும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
தமிழக அரசு பற்றி குறைகூறுவதை பொன்.ராதாகிருஷ்ணன் நிறுத்த வேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ
Published on

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் நலிந்த நிலையில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் எவை, எவை உள்ளது என்பதை ஆதாரத்துடன் தெரிவித்தால் அவற்றிற்கு நிதி உதவி அளித்து அவற்றை சிறப்பான நிலைக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மூடப்பட்ட நூற்பாலைகளை திறப்பது, கைத்தறித்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. நூற்பாலைகள் திறக்க சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேசி முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று அவற்றை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். குறுகிய கால பயிர்க்கடன்களுக்காக ரூ.7 ஆயிரம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க அண்டை மாநிலங்கள் மறுத்து வருகின்றன. எனவே தான் தமிழகத்தில் உள்ள நீராதாரங்களை பாதுகாக்கவும், வெயில் நேரத்தில் நீர் ஆவியாவதை தடுக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளோம். அதன் ஒருகட்டமாகவே தெர்மாகோல் திட்டத்தை பரீட்சார்த்தமாக செயல்படுத்தினோம். இதனை அறிவியல் பூர்வமாக ஆலோசித்து உரிய முயற்சி மேற்கொள்ள அதிகாரிகள் முன் வரவேண்டும்.

எதிர்காலத்தில் நீர்நிலைகளை பாதுகாக்க, நீர் ஆவியாவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மத்திய அரசை விமர்சித்து பேச வேண்டாம் என்று யாரும் கூறவில்லை. தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சி நிவாரண பணிக்கு மத்திய அரசிடம் ரூ.33 ஆயிரம் கோடி நிதி கேட்டோம். ஆனால் அவர்கள் வழங்கவில்லை.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கடற்கரை சாலை திட்டத்துக்கு மத்திய அரசு நிதி தர தயாராக இருப்பதாகவும், ஆனால் மாநில அரசு அதனை கண்டுகொள்ளவில்லை என்றும் கூறி இருக்கிறார். அவர் அரசின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் பற்றி ஊடகங்கள் மூலம் குறைகூறுவதை நிறுத்த வேண்டும். அதிகாரிகளிடம் இதுபற்றி தகவல் கேட்டால் என்ன காரணத்துக்காக திட்டங்களின் செயல்பாடு தாமதமாகிறது என்பதற்கு விளக்கம் அளிப்பார்கள். அதனை விடுத்து இவ்வாறு கூறுவது சரியல்ல.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரும்பினார். அவரது எண்ணத்தை நிறைவேற்றுவோம். அவர் கொண்டு வந்த வி‌ஷன் 2023 திட்டத்தை நிறைவேற்றுவோம். 4 ஆண்டுகளும் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும். அடுத்து வரும் தேர்தலிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com