ஆதார் இணைப்புக்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டிக்க வாய்ப்பு
வங்கி கணக்கு, வருமான வரி கணக்கு, செல்போன் இணைப்பு, மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களை பெற ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதற்காக காலக்கெடுவும் விதித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது, மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, வங்கிக் கணக்கு மற்றும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை 2018-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இதற்காக விதிகளையும் திருத்தி அமைத்து அறிவிப்பை வெளியிட்டது. அதன்பின்னர் செல்போன் எண்களுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவும் 2018 மார்ச் 31-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆதார் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘பல்வேறு நலத்திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை கடந்த காலங்களில் ஏற்கனவே நீட்டித்துள்ளோம். தற்போதுள்ள காலக்கெடுவை மீண்டும் மத்திய அரசு நீட்டிக்க வாய்ப்பு உள்ளது’ என்று தெரிவித்தார்.
பின்னர் இதுபற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘அட்டர்னி ஜெனரல் கூறியது மிகவும் முக்கியமான விஷயம். எனவே, மனுதாரர்கள் ஏற்கனவே முன்வைத்த வாதங்களை மீண்டும் மீண்டும் வைப்பதை ஏற்க முடியாது’ என்று தெரிவித்தனர்.
‘விசாரணை முடிந்து தீர்ப்பை 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தாலும், 10 நாட்கள் மட்டுமே உள்ளன. அதற்குள் வங்கிகளால் அனைத்து கணக்குகளுக்கும் ஆதாரை இணைப்பது கடினமான காரியம். எனவே, இந்த விஷயத்தில் அட்டர்னி ஜெனரல் உதவ வேண்டும்’ என்று நீதிபதி சந்திரசூட் கேட்டுக்கொண்டார்.
அதேசமயம், ஆதார் திட்டத்திற்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர் அரவிந்த் தத்தார், ஆதார் திட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இருப்பதாக தெரிவித்தார். இன்றும் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. #tamilnews

