ஜாதவ் குடும்பத்தினரிடம் மனித உரிமை மீறல் - பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவ் குடும்பத்தினரிடம் மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.
ஜாதவ் குடும்பத்தினரிடம் மனித உரிமை மீறல் - பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
Published on

மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவ் குடும்பத்தினரிடம் மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. இந்த சந்திப்பை வைத்து அபாண்டமாக பழி சுமத்த பாகிஸ்தான் சதி செய்வதாக சுஷ்மா சுவராஜ் குற்றம்சாட்டினார்.

இந்திய கடற்படையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் குல்பூஷண் ஜாதவ் (வயது 47). இவர் பாகிஸ்தானில் நுழைந்து உளவு பார்த்ததாக கூறி கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. மேலும் அவருக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனையும் விதித்தது. இதற்கு சர்வதேச கோர்ட்டில் இந்தியா இடைக்கால தடை உத்தரவு பெற்றது.

இந்நிலையில் பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவை சந்திக்க அவருடைய தாயார் அவந்தி, மனைவி சேத்தன்குல் ஆகியோர் இஸ்லாமாபாத் சென்றனர். அப்போது இருவரும் அணிந்திருந்த தாலி, வளையல்கள், நெற்றிப்பொட்டு ஆகியவற்றை அகற்ற பாகிஸ்தான் அதிகாரிகள் உத்தரவிட்டனர். சேத்தன்குல் அணிந்திருந்த காலணிகளை அகற்றிவிட்டு வேறு காலணிகளை அணிய செய்தனர். உடைகளையும் மாற்றுமாறு நிர்ப்பந்தித்தனர்.

இந்த சந்திப்பை முடித்து விட்டு திரும்பிய சேத்தன்குல்லிடம் அவருடைய காலணிகளை பாகிஸ்தான் அரசு திரும்ப ஒப்படைக்கவில்லை. அதில் உலோகப்பொருள் இருப்பதாகவும், அது ரகசிய கேமராவா, அல்லது ஒலிப்பதிவு ‘சிப்’பா? என உறுதிசெய்ய அந்த காலணிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் டெல்லி மேல்-சபையில் நேற்று எதிரொலித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அறிக்கை மூலம் பதில் அளித்து பேசியதாவது:-

ஜாதவ் தாய், மனைவியிடம் உடைகளை மாற்றவும், நெற்றிப்பொட்டு, வளையல், தாலி ஆகியவற்றை அகற்றவும் நிர்ப்பந்தம் செய்ததன் மூலம் பாகிஸ்தான் அரசு மனித உரிமை மீறலில் ஈடுபட்டது அப்பட்டமாக தெரியவந்து உள்ளது. பொதுவாக நம் நாட்டில் கணவர் இறந்தால் மட்டுமே தாலி அணியமாட்டார்கள், நெற்றிப்பொட்டு வைக்கமாட்டார்கள். தன் தாய் அவற்றை அணியாததால் தன் தந்தைக்கு என்ன ஆனதோ என குல்பூஷண் ஜாதவ் பதைபதைத்து உள்ளார்.

ஜாதவ் மனைவியிடம் இருந்து வாங்கிய காலணிகளில் ரகசிய கேமரா அல்லது ‘சிப்’ இருக்கலாம் என பாகிஸ்தான் கூறியிருப்பது அபத்தமான குற்றச்சாட்டு. இதன் மூலம் அவர்களின் சந்திப்பை தவறான பிரசார உத்தியாக பயன்படுத்தி இந்தியா மீது அபாண்டமாக பழி சுமத்த பாகிஸ்தான் சதி செய்கிறது.

டெல்லி மற்றும் துபாய், பாகிஸ்தான் விமான நிலையங்களில் துல்லிய சோதனைக்கு பிறகே ஜாதவ் மனைவி, தாய் ஆகியோர் இஸ்லாமாபாத் சிறைக்கு சென்று உள்ளனர். அப்படி இருக்கும் போது ஜாதவ் மனைவியின் காலணிகளில் ரகசிய கேமரா வைக்கப்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் கூறுவது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.

இதற்கு கண்டனம் தெரிவிக்க வார்த்தைகளே இல்லை. எனவே இதை பாராளுமன்ற இரு அவைகள் மட்டுமன்றி, நம் நாட்டு மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் பாகிஸ்தானுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும். இந்த பிரச்சினையை சர்வதேச கோர்ட்டுக்கு கொண்டு செல்வோம். குல்பூஷண் ஜாதவை விடுவித்து இந்தியா கொண்டுவர மத்திய அரசு முழு முயற்சிகளையும் எடுக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com