

ஐதராபாத்:
தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சி தலைவரும் தெலுங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ், தேசிய அளவில் பெரிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கு மாற்றாக பலம்மிக்க மூன்றாவது அணி அமைக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த யோசனைக்கு ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாத்துல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சி தொடங்கப்பட்ட ஆண்டுதினம் வரும் ஏப்ரல் மாதம் கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டத்தின்போது மூன்றாவது அணியை சந்திரசேகர ராவ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்துள்ள நிலையில், மூன்றாவது அணியை உருவாக்கும் வேலைகளை சந்திரசேகர ராவ் விரைவுப்படுத்தி வருகிறார்.
இதில் ஒருகட்டமாக, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் மாநில கட்சிகளை ஒன்றிணைப்பதில் அவர் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார். தேசிய அரசியலில் மூன்றாவது சக்தியாக மம்தா பாணர்ஜி தலைமையிலான மாற்று அணி உருவாக வேண்டும் என்ற கருத்தை பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் மூத்த தலைவரும், பிரபல சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி நேற்று வரவேற்பு தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இன்று கொல்கத்தா நகருக்கு சென்ற சந்திரசேகர ராவ், மேற்கு வங்காளம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து மூன்றாவது அணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சந்திரசேகர ராவ், “காங்கிரஸ், பா.ஜ.க அல்லாத மூன்றாவது அணியை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கான தேவையும் உள்ளது. வழக்கமான அரசியல் பாணியை விட இது மேம்பட்டதாக இருக்கும்” என தெரிவித்தார்.
“மக்களின் பல்வேறு பிரச்னைகளின் போது ஏற்படும் சூழ்நிலையில் அரசியல் நிலை மாறுபடுகிறது. தெலங்கானா முதல்வருடனான இந்த சந்திப்பு ஒரு தொடக்கமே” என மம்தா பாணர்ஜி கூறினார்.
இந்த ஆலோசனைக்கு பின்னர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது யாருக்கு சாதகமாக வாக்களிப்பது? என்பது தொடர்பாக சந்திரசேகர ராவ் முடிவு செய்வார் என தெரிகிறது. #TamilNews