

லால்குடி:
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளுரில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. உறவினருக்கு சொந்தமான நவீன அரிசி ஆலை உள்ளது. இதை கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் நிர்வகித்து வருகிறார்.
இந்த நிலையில் திருச்சி மண்டல வருமான வரித்துறை அலுவலக அதிகாரிகளுக்கு ஆலை வருமான கணக்கு தொடர்பாக புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அங்கு சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை 3.30 மணியளவில் திருச்சி மண்டல வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் ஆல்பர்ட் மனோகர் தலைமையில் உதவி ஆணையர்கள் மதன்குமார், விஜய்தீபன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பூவாளுரில் உள்ள அரிசி ஆலைக்கு சென்றனர். அவர்களுடன் திருச்சி மாநகர போலீசாரும் சென்றனர்.
ஆலைக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளே நுழைந்ததும் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆலையின் வாயில் கதவு மூடப்பட்டது. பின்னர் அரிசி ஆலை முழுவதும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஆவணங்கள், கோப்புகள், ஆலையின் வரவு செலவு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்தனர். அப்போது அவர்களுடன் அரிசி ஆலை மேலாளர் கிருஷ்ணமூர்த்தியும் உடனிருந்தார்.
இந்த அரிசி ஆலை சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய நவீன அரிசி ஆலையான இங்கு ஒரே நாளில் டன் கணக்கில் நெல் அரிசியாக்கப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டு திறக்கப்பட்ட அரிசி ஆலையில் வருமான விவரங்கள், தினமும் அரவையாகும் நெல் அளவு , ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை மேலாளர் கிருஷ்ண மூர்த்தியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டனர்.
அங்கு அலுவலகத்தில் இருந்த கணக்கு விவரங்களையும் சுட்டிக்காட்டி கேள்விகள் எழுப்பினர். நேற்று மாலை தொடங்கிய சோதனை நள்ளிரவிலும் நீடித்தது.
தொடர்ந்து விடிய, விடிய சோதனை நடந்தது. நீண்ட நேரம் ஆய்வு செய்த அதிகாரிகள் ஓய்வு எடுக்க அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் மற்றொரு அதிகாரிகள் குழு தொடர்ந்து ஆய்வை மேற்கொண்டது. அவர்களுக்கு வெளியில் இருந்து இரவு உணவு கொண்டு செல்லப்பட்டது. இன்று காலையும் ஆலையில் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து 20 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை செய்து வரும் தகவல் அறிந்து ஆலை முன்பு தி.மு.க.வினர் திரண்டனர். அப்போது அங்கு வந்த முன்னாள் அமைச்சர் கே.என். நேரு அவர்களை கலைந்து செல்லும்படி கூறினார்.
இந்த சோதனை நடைபெற்ற போது கே.என்.நேரு வின் வக்கீல்களும் அங்கு வந்தனர். அவர்கள் திடீர் சோதனை குறித்து தகவல்கள் திரட்டினர். இந்த அரிசி ஆலையில் 50 ஊழியர்கள் தினமும் பணியாற்றி வருகின்றனர். அவர்களிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
சோதனை முடிவில் கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் உள்ளிட்டவர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சோதனை குறித்த எந்த தகவல்களையும் அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் உறவினர்கள் கல்வி நிறுவனம் மற்றும் பல்வேறு தொழில்கள் செய்துவரும் நிலையில் அரிசி ஆலையில் மட்டுமே இந்த அதிரடி சோதனை நடத்தப்படுகிறது.
ஆலை வருமானம் கணக்கு தொடர்பாக வந்த புகார் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ததாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.