ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக் வீட்டில் நாளை வரை சோதனை தொடரும்: அதிகாரிகள் தகவல்

ஜெயா டி.வி மற்றும் ஜாஸ் சினிமாஸ் சி.இ.ஓ விவேக் வீட்டில் இன்று காலை தொடங்கிய சோதனை நாளை வரை தொடரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக் வீட்டில் நாளை வரை சோதனை தொடரும்: அதிகாரிகள் தகவல்
Published on

சென்னை:

சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை சுமார் 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்னபிரியாவின் இல்லம், ஜெயா டி.வி இயக்குநர் விவேக் இல்லம் மற்றும் மன்னார் குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், சசிகலா ஆதரவாளர் புகழேந்தி இல்லம், டி.டி.வி தினகரன் இல்லம் ஆகியவற்றிலும் சோதனை நடந்துவருகின்றன. சசிகலா குடும்பத்தினர் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களின் இல்லத்திலும் சோதனை நடந்து வருகிறது. சுமார் 1800 அதிகாரிகள் மொத்தமாக இந்த சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் இல்லம், கோடநாடு எஸ்டேட் பங்களா என தொடரும் இந்த சோதனைகள் அரசியல் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டி.டி.வி தினகரனின் முக்கிய ஆதரவாளர்கள் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டுகளில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஜெயா டி.வி மற்றும் ஜாஸ் சினிமாஸ் சி.இ.ஓ விவேக் வீட்டில் சோதனை நடத்தி வரும் அதிகாரிகள் நாளை வரை சோதனை தொடரும் என்று தெரிவித்துள்ளனர். இன்று காலை 6 மணிக்கு தொடங்கப்பட்ட சோதனை விடிய, விடிய நாளை வரை தொடரும் என அதிகாரிகள் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com