

யூதர்களின் நாடான இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு(70) கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார்.
ஏற்கனவே, 1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார். தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் டீல் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதா? என கடந்த 14 மாதங்களாக போலீசார் விசாரித்து வந்தனர். தன் மீதான புகாரை பெஞ்சமின் நேதன்யாகு மறுத்து வந்தார். அவரது மனைவி சாரா மீதும் ஊழல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த ஊழல் தொடர்பான விசாரணை ஜெருசலேம் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வரும் 17-ம் தேதி இவ்வழக்கு விசாரணையின்போது பெஞ்சமின் நேதன்யாகு ஆஜராவதற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதற்கிடையில், உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பீதி அதிகரித்து வருவதால் இஸ்ரேல் நாட்டில் பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதற்கும் விழாக்கள் போன்றவற்றை பெரிய அளவில் நடத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.