தொடர்ந்து 10-வது வெற்றியை பதிவு செய்து சாதனை படைக்குமா இந்திய அணி?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இன்று மோத உள்ள இந்திய அணி தொடர்ந்து 10-வது வெற்றியை பதிவு செய்து சாதனை படைக்குமா என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்திய விக்கெட் கீப்பர் டோனி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட காட்சி. அருகில் ரோகித் சர்மா உள்ளார்
இந்திய விக்கெட் கீப்பர் டோனி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட காட்சி. அருகில் ரோகித் சர்மா உள்ளார்
Published on

பெங்களூரு:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது.

சென்னை (26 ரன் வித்தியாசம்), கொல்கத்தா (50 ரன் வித்தியாசம்), இந்தூர் (5 விக்கெட் வித்தியாசம்) ஆகிய இடங்களில் நடந்த முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றதோடு 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) பகல்-இரவு மோதலாக அரங்கேறுகிறது.

‘களம் இறங்கி விட்டால் எதிரணி மீது கருணை காட்டும் பேச்சுக்கே இடமில்லை; வெற்றிப்பயணம் தொடரும்’ என்று இந்திய கேப்டன் விராட் கோலி சூளுரைத்துள்ளார். முதல் ஆட்டத்தில் தொடக்க வரிசை ஆட்டக்காரர்கள் சோபிக்க தவறிய போது, மிடில் மற்றும் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் கைகொடுத்தனர். 3-வது ஆட்டத்தில் தொடக்க ஜோடியும் ஒரு சேர ‘கிளிக்’ ஆனது. அரைசதம் அடித்த ரோகித் சர்மாவும், ரஹானேவும் முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்து அசத்தினர். ஆக, இந்திய அணி பேட்டிங்கில் முழு பலத்துடன் இப்போது திகழ்கிறது. பேட்டிங் வரிசைக்கு முதுகெலும்பாக இருக்கும் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, 9 சிக்சருடன் இரு அரைசதங்கள் நொறுக்கியுள்ளார்.

பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், பும்ரா, சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் மிரட்டுகிறார்கள். ஆனால் தொடரை வசப்படுத்தி விட்டதால் ஒரு சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்திய அணி இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவுடன் 5 அல்லது அதற்கு மேலான ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் 7 முறை விளையாடி உள்ளது. எந்த ஒரு தொடரிலும் 3 ஆட்டங்களுக்கு மேல் இந்தியா வெற்றி பெற்றதில்லை. இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடினால் அது இந்திய அணிக்கு புதிய சாதனையாக அமையும். மேலும் தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வெற்றியை தேடித்தந்த முதல் இந்திய கேப்டன் என்ற அரிய சிறப்பு விராட் கோலியின் வசம் ஆகும்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூருவில் விராட் கோலி கலக்கியிருக்கலாம். ஆனால் சர்வதேச போட்டியில் இங்கு அவரது செயல்பாடு மோசமாக இருக்கிறது. இங்கு அவர் ஆடியுள்ள 4 ஒரு நாள் போட்டிகளில் 0, 8, 34, 0 என்று வீதமே ரன் எடுத்துள்ளார். அந்த மோசமான நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேகத்துடன் வரிந்து கட்டுவார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘நடப்பு தொடரில் மூன்று முறையும் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளேன். அவருக்கு ஸ்டம்பை குறி வைத்து பந்து வீசக்கூடாது என்பதே எனது திட்டம். ஆப்-சைடுக்கு வெளியே, வேகத்தை மாற்றி பந்து வீச வேண்டும். எனது ஓவரில் 2-3 பந்தில் அடிக்காவிட்டால் அதன் பிறகு இறங்கி வந்து ஆட முயற்சிப்பார். அதன் மூலம் விக்கெட்டை வீழ்த்த முடியும்.

டேவிட் வார்னர் மிகவும் அபாயகரமான ஒரு பேட்ஸ்மேன். முடிந்தவரை அவரை சீக்கிரம் வெளியேற்றுவதே எங்களது பிரதான இலக்கு’ என்றார்.

வெளிநாட்டு மண்ணில் கடைசி 13 ஒரு நாள் போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறாததால் உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. தொடரை இழந்து விட்டாலும், இந்தியாவின் வீறுநடைக்கு முட்டுக்கட்டை போட்டு ஆறுதல் வெற்றிக்காக தீவிர முனைப்பு காட்டும். ஒரு வெற்றி கிடைத்து விட்டால் போதும். அதன் பிறகு உத்வேகம் கிளர்ந்தெழும், வீரர்களிடையே நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

முந்தைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஆரோன் பிஞ்சின் சதத்தின் (124 ரன்) உதவியுடன் 293 ரன்கள் குவித்த போதிலும், அதை வெற்றிக்குரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் போனது. அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் பார்மில் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

பீல்டிங்கின் போது கை விரலில் எலும்பு முறிவுக்குள்ளான சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் தாயகம் திரும்புகிறார். அதனால் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா களம் இறங்குவார்.

இது பருவமழை காலம் என்பதால் பெங்களூருவில் அடிக்கடி மழை பெய்கிறது. இந்த ஆட்டத்தின் போதும் மழை குறுக்கிட அதிக வாய்ப்பு உள்ளது.

இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, ரஹானே, விராட் கோலி (கேப்டன்), மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ் அல்லது லோகேஷ் ராகுல், டோனி, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா அல்லது உமேஷ் யாதவ் அல்லது முகமது ஷமி.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜேம்ஸ் பவுல்க்னெர் அல்லது பேட் கம்மின்ஸ், நாதன் கவுல்டர்-நிலே, கனே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்சன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com