

சென்னை:
தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தலைநகரான சென்னையில் பூதாகரமாகி உள்ளது.
ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது கடந்த 2013-ம் ஆண்டு குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அதிரடியாக தடை விதித்தார்.
சென்னையை பொறுத்த வரையில் குட்கா போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகும். பள்ளி-கல்லூரி மாணவர்களையும் இந்த பழக்கம் தொற்றிக் கொண்டுள்ளது வேதனை அளிக்கும் விஷயமாகும்.
போதை பொருட்களுக்கு தடை வருவதற்கு முன்னர் கடைகளில் ‘ஷாம்பூ’ பாக்கெட்டுகளை போல அதனையும் தொங்கவிட்டு விற்பனை செய்வார்கள். அதிலும் போதையேற்றும் புகையிலையை உள்ளங்கையில் தட்டி சிறிய உருண்டையாக்கி உதட்டுக்குள் பதுக்கி சுகம் காண்பவர்கள் ஏராளம்.
இந்த புகையிலை பாக்கெட்டுகளை பல கடைகளில் வெற்றிலைக் கட்டுக்குள் வைத்து குளிரூட்டியும் கூடுதல் விலைக்கு விற்பார்கள். இந்த போதைக்கு கட்டுப்பட்டவர்கள் அதில் இருந்து மீள்வது கடினம்.
இப்படி வெளிப்படையாக விற்பனை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் 2013-ம் ஆண்டு தடைக்கு பின்னர் பதுக்கல் பொருட்களாகவே மாறியது. தடையை தொடர்ந்து போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள குடோன்கள், விற்பனை செய்யும் பெட்டிக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இதன் எதிரொலியாக சில குடோன்கள் மூடப்பட்டன. ஆனால் பெரும்பாலான குடோன்கள் அப்படியே செயல்பட்டன.
இதுபோன்ற குடோன் உரிமையாளர்கள் சுகாதார துறையினர் மற்றும் போலீசாருக்கு கொடுப்பதை கொடுத்துவிட்டு தடை செய்யப்பட்ட போதை பொருட்களை தங்கு தடையின்றி விற்பனை செய்தனர். அப்படி சிக்கியதுதான் செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோன்.
அங்கு வருமான வரி துறையினர் கடந்த 1½ ஆண்டுக்கு முன்னர் நடத்திய திடீர் சோதனையில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளின் பெயர் பட்டியல் சிக்கியது. ஆனால் அந்த விவகாரம் பின்னர் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில்தான் குட்கா விவகாரம் அமைச்சர் ஒருவரின் பெயருடன் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. இந்த விவகாரம் சட்டசபையிலும் எழுப்பப்பட்டது.
குட்கா விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும். சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.
இருப்பினும் சென்னையில் குட்கா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. பெட்டிக் கடைகளில் தாராளமாக கிடைக்கிறது. மளிகை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளிலும் மறைத்து வைத்து குட்காவை விற்பனை செய்கிறார்கள்.
இதனை தடுப்பதற்காக சுகாதார துறை அதிகாரிகள் அவ்வப்போது நடவடிக்கை எடுத்தும் வருகிறார்கள். ஆனால் முழுமையாக அதனை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை விட கட்டுப்படுத்தவில்லை என்பதே உண்மையாகும்.
தமிழகத்தில் போதை பொருட்கள் தடைவிதிக்கப்பட்ட பின்னர் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து இதுவரை ரூ.10 கோடிக்கும் மேல் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
குட்கா விவகாரம் மீண்டும் வாய் பிளந்துள்ளதையடுத்து, அதனை விற்பனை செய்யும் வியாபாரிகளை பிடித்து வழக்கு போடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் போதை வியாபாரிகள் கதற தொடங்கி உள்ளனர்.