

சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், தமிழ்நாட்டில் 54,439 அங்கன்வாடி மையங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கன்வாடி மையங்களில் பயின்று வரும் குழந்தைகளுக்கு, தேவையான ஊட்டச்சத்து, ஆரம்ப கால கல்வி கற்பதற்கான ஏற்ற சூழல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வளர்வதற்கு தேவையான பணிகளை செயல்படுத்தி வருகிறது.
தேசிய ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்விக் கொள்கை 2013-ன் அடிப்படையில், அங்கன்வாடி மையங்களில் பயின்று வரும் 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி பாடத்திட்டத்தில் “ஆடிப்பாடி விளையாடு பாப்பா” என்ற புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தினை செயல்படுத்துவதற்கு, முன்பருவக் கல்வி உபகரணங்கள், பாடத்திட்டப் புத்தகங்கள், குழந்தைகளுக்கான செயல்பாட்டுப் புத்தகங்கள் மற்றும் ஆய்வுத்தாள்கள் ஆகியவற்றிற்காக, ஆண்டு தோறும் 15 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது. இவ்வகையில் தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்கள், துடிப்பு மிக்க முன்பருவக் கல்வி மற்றும் வளர்ச்சி மையங்களாக, மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாக செயல்பட்டு வருகின்றன.
2016-17-ம் ஆண்டு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை மானியக் கோரிக்கையில், இந்த நிதியாண்டு முதல் அங்கன்வாடி மையங்களில் பயின்று ஆரம்பகால கல்விக்காக வேறு பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு அம்மா ஆணையின்படி முன்பருவக் கல்வி நிறைவு சான்றிதழ் வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அரசு, 2016-17-ம் கல்வியாண்டில் 5 வயது நிறைவடைந்து தொடக்கக் கல்வி பயிலச் செல்லும் 2,62,073 அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வி நிறைவு சான்றிதழ் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதல்-அமைச்சர்எடப்பாடி கே. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், 7 அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு முன்பரு வக்கல்வி நிறைவு சான்றி தழ்களை வழங்கினார்கள்.
இச்சான்றிதழ்கள் வழங்குவதன் மூலம், அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கை அதிகரித்திடவும், இடைநிற்றலை குறைக்கவும் வழிவகை ஏற்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் வி. சரோஜா, தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் ஆர். கண்ணன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் இணை இயக்குநர் ஜோ.ம. யமுனா ராணி மற்றும் அங்கன்வாடி குழந்தைகளின் தாய்மார்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.