பொருளாதார வீழ்ச்சியை தவிர்த்திருக்க முடியும்- ப.சிதம்பரம் கருத்து

சரியான நிதி மற்றும் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை எடுத்திருந்தால் பொருளாதார வீழ்ச்சியை தவிர்த்திருக்க முடியும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ப சிதம்பரம்
ப சிதம்பரம்
Published on

சென்னை:

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான (ஏப்ரல் முதல் ஜூன் வரை) பொருளாதார அறிக்கையை தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் இதுவரை இல்லாத அளவுக்கு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் (ஜி.டி.பி.) 23.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தது. இதற்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ப.சிதம்பரம் கூறியதாவது:-

ஒட்டுமொத்த பொருளாதாரம் வீழ்ச்சி என்ற செய்தி வேண்டுமானால் மத்திய அரசுக்கு ஆச்சரியம் அளிப்பதாக இருக்கலாம். ஏனென்றால் அவர்கள் தான் முதல் காலாண்டில் ஏதாவது ‘பசுமை’ தெரிகிறதா என பல நாட்களாக எதிர்பார்த்தார்கள். சரியான நிதி மற்றும் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை செய்திருந்தால் வீழ்ச்சியை தவிர்த்திருக்க முடியும். ஆனால் எதையும் செய்யாத மத்திய அரசுக்கு இது வெட்கப்படும் படியான விஷயமாக இருக்க வேண்டும், ஆனால் மோடி அரசு வெட்கப்படாது.

தவறுகளையும் அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் செவிடர்களின் காதில் தான் சொல்லப்பட்டன. ஒட்டுமொத்த தேசமும் இப்போது பொருளாதார வீழ்ச்சியால் பெரிய விலையை கொடுக்கிறது. போலியான கதைகளை மக்களிடம் மத்திய அரசு கூறி வந்தது. ஆனால் அந்த கதைகள் அனைத்தும் மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் அறிக்கை மூலம் இப்போது வெளிச்சத்துக்கு வந்து விட்டது.

வேளாண்துறை, வனம் மற்றும் மீன்பிடி தொழில் மட்டுமே 3.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடவுள் தான் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறிய நிதி மந்திரி, கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 23.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால், 2019-ம் ஆண்டு ஜூன் 30-ந் தேதி வரையிலான ஒரு காலாண்டின் ஒட்டுமொத்த உற்பத்தியும் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com