நிதி உதவி வழங்கி முக ஸ்டாலின்
நிதி உதவி வழங்கி முக ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் மாணவர்கள்-ஏழைகளுக்கு மு.க.ஸ்டாலின் உதவி

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் மக்கள்நலத் திட்டங்களை பார்வையிட்டு, பல்வேறு உதவிகளை வழங்கினார்.
Published on

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் மக்கள்நலத் திட்டங்களை பார்வையிட்டு, பல்வேறு உதவிகளை வழங்கினார். கோபாலபுரம் சென்னை நடுநிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 13.3 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட நான்கு வகுப்பறைகளை பார்வையிட்டார்.

560 மாணவர்களுக்கு தண்ணீர் பாட்டில் வழங்கினார். 23 ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்தார். ஜி.கே.எம்.காலனி 41வது தெருவில் உயரழுத்த மின் கம்பியை புதைவிட கம்பிகளாக மாற்றியமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

ஜவகர் நகரில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், 1 முதல் 5ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் 9 பேருக்கு கல்வி உதவி , புத்தகப் பை, வாட்டர் பாட்டில், நோட்டு புத்தகம், 6 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் 26 பேருக்கு கல்வி உதவி , புத்தக பை, தண்ணீர் பாட்டில், நோட்டு புத்தகம், கணித கருவி பெட்டி, கல்லூரி மாணவ, மாணவிகள் 15 பேருக்கு கல்வி உதவி, புத்தகப் பை, பேனா, வாட்டர் பாட்டில், ஆதரவற்ற நிலையில் உள்ள ஒரு மாணவிக்கு கல்வி உதவி, 3 பேருக்கு மடிக்கணினி வழங்கினார்.

ஒருவருக்கு திருமண உதவி, 7 பேருக்கு மருத்துவ உதவி, 5 பேருக்கு தையல் இயந்திரம், 5 பேருக்கு நான்குச் சக்கர தள்ளுவண்டி, 5 பேருக்கு மீன்பாடி வண்டி வழங்கினார். 122 பேருக்கு மூக்குக் கண்ணாடி மற்றும் புத்தாடைகள், குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததால் பாதிக்கப்பட்ட 2 பேருக்கு உதவி பொருட்கள் என மொத்தம் 201 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

திரு.வி.க. நகரில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ராணி ஜனார்த்தனம் வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com