search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டாசு ஆராய்ச்சி மையத்தை அமைக்க  கோரிக்கை
    X

    பட்டாசு ஆராய்ச்சி மையத்தை அமைக்க கோரிக்கை

    • சிவகாசியில் கிடப்பில் போடப்பட்ட பட்டாசு ஆராய்ச்சி மையத்தை உடனே அமைக்க வேண்டும்.
    • பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசு ஆலைகள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    நாட்டில் 90 சதவீத பட்டாசு உற்பத்தி சிவகாசியில் தயாரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

    பட்டாசு தொழிலை மேம்படுத்துவதற்காக மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன் பேரில் கடந்த ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகளின் ஆலோசனைக்கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை விஞ்ஞானி சாதனா ராயலு, விஞ்ஞானி சரவணன் உள்பட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் சிவகாசியில் பட்டாசு ஆலை வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலையூரணி கிராமத்தில் பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அறிவிப்பு செய்யப்பட்டு ஒரு வருடம் ஆகியும் பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைவதற்கான எவ்வித பணியும் தொடங்கப்படாமல் உள்ளது.

    பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டால் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்றுகளை பயன்படுத்தி வேதிப்பொருட்கள் இந்தியா முழுவதும் உள்ள கெமிக்கல் ஆலை மற்றும் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்த அனுப்பி வைக்கலாம்.

    மேலும் இந்த மையத்தின் மூலம் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரம் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத, தரமான வேதிப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்க முடியும். எனவே சிவகாசியில் பட்டாசு ஆராய்ச்சி மையத்தை உடனடியாக தொடங்குவதற்கு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×