search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செய்முறை தேர்வு - பள்ளிகளில் ஆய்வு
    X

    கோப்புபடம்.

    செய்முறை தேர்வு - பள்ளிகளில் ஆய்வு

    • செய்முறை பொதுத்தேர்வு மார்ச் 1-ந் தேதி துவங்கி, 9-ந் தேதி வரை நடக்கிறது.
    • புதிதாக மையம் கோரி விண்ணப்பித்த பள்ளிகள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன.

    திருப்பூர் :

    தமிழகம் முழுக்க 10-ம்வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை பொதுத்தேர்வு, மார்ச் 1-ந் தேதி துவங்கி, 9-ந் தேதி வரை நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் இத்தேர்வு நடத்த ஆய்வக வசதி கொண்ட பள்ளிகள், புதிதாக மையம் கோரி விண்ணப்பித்த பள்ளிகள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.

    கடந்த ஆண்டுகளில் எழுத்துத்தேர்வுக்கு இரு வாரங்களுக்கு முன்பே, செய்முறை பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் தற்போது மூன்று பொதுத்தேர்வு எழுதும் வகுப்புகளுக்கும் ஒரே சமயத்தில் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதோடு, படிக்க போதிய கால அவகாசமும் வழங்கப்படவில்லை. இதன்மூலம் செய்முறை தேர்வுக்குப் பின் மாணவர்கள் பள்ளிக்கு முழுக்கு போட முடியாது என்பது தலைமையாசிரியர்களின் கருத்தாக உள்ளது.

    மேலும் அடுத்த வாரத்திற்குள் செய்முறை தேர்வு நடக்கவுள்ள பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படும். அப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் முழுமையாக இருப்பதை உறுதி செய்ய பிரத்யேக குழு சார்பில் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிளஸ் 2 மாணவர்களின் அகமதிப்பீட்டு மதிப்பெண்களில், பிழை நேர்ந்தால் உரிய பள்ளி தலைமையாசிரியரே பொறுப்பேற்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை பாடங்களுக்கு 70 மதிப்பெண்களுக்கும், செய்முறை அல்லாத பாடங்களுக்கு 90 மதிப்பெண்களுக்கும், எழுத்துத்தேர்வு நடத்தப்படும். செய்முறை பொதுத்தேர்வு 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே நடத்தப்படும். மீதமுள்ள 10 மதிப்பெண்கள் அகமதிப்பீட்டு தேர்வுக்காக அந்தந்த பாட ஆசிரியர்களே வழங்குவர்.

    பொதுவாக இம்மதிப்பெண்கள் ஒருமுறை பதிவேற்றினால் மாற்ற முடியாது. பள்ளி எமிஸ் இணையதள பட்டியலில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. இடைநிற்றல் மாணவர்களின் பட்டியலும் இதில் இருப்பதால் வகுப்பு செயல்பாடுகளுக்கான அகமதிப்பீட்டு தேர்வு மதிப்பெண்களை முறையாக பதிவேற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இப்பட்டியலை இணையதளத்தில் பதிவேற்ற இம்மாத இறுதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதில் தவறு ஏற்படும் பட்சத்தில் உரிய தலைமையாசிரியரே பொறுப்பேற்க நேரிடும் என அரசு தேர்வுகள் துறை எச்சரித்துள்ளது. திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பதிவேற்ற துவங்குமாறு ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×