search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் ஊராட்சி மன்றத்தலைவரை வெட்ட அரிவாளுடன் ஓடிவந்த வீட்டு உரிமையாளர்
    X

    பெண் ஊராட்சி மன்றத்தலைவரை வெட்ட அரிவாளுடன் ஓடிவந்த வீட்டு உரிமையாளர்

    • ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ளவில்லை என ஊராட்சி நிர்வாகம் சார்பில் மீண்டும் புகாராளிக்கப்பட்டது.
    • ஊராட்சி சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் வேளானேரி கிராமத்தை சேர்ந்தவர் சங்கிலி (வயது 55). இவரது குடும்பத்தினர் கடந்த பல வருடங்களாக பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து காம்பவுண்டு சுவரை கட்டி தெருவை மறைத்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களை சங்கிலியும், அவரது குடும்பத்தினரும் நாள்தோறும் ஆபாசமாகவும் மிகவும் தரக்குறைவாக பேசி வருவதாகவும் புகார் எழுந்தது. இதனால் அந்த பாதையை கடந்து தங்களது வீடுகளுக்கு சென்று வருவதில் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    தனிப்பட்ட ஒரு குடும்பத்தினர் பொதுப்பாதையை ஆக்கிரமித்துள்ளது குறித்து வேளானேரி ஊராட்சி மன்றத்தலைவரான போதும்பொண்ணு முனியாண்டியிடம் அப்பகுதி குடியிருப்பு பொதுமக்கள் புகார் அளித்தனர்.

    மேலும் ஊராட்சி மன்ற தலைவர் போதும்பெண்ணு, இதுகுறித்து நரிக்குடி ஒன்றிய பி.டி.ஓ., திருச்சுழி தாசில்தார் ஆகியோரிடம் புகாரளித்தார். அந்த பகுதியை அளந்து ஆக்கிரமிப்பு இருந்தால் பாரபட்சமின்றி அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

    இது தொடர்பாக ஊராட்சியில் தீர்மானமும் நிறைவேற்றிய நிலையில் அளவீடுகள் செய்வதற்கான கட்டணமும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் செலுத்தப்பட்டது. இதனால் சங்கிலி குடும்பத்தினருக்கும், ஊராட்சி மன்றத்தலைவர் போதும்பொண்ணுவுக்கும் இடையே பகை மூண்டது. இதற்கிடையில் தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் சுமார் 10 அடி பொதுப்பாதையை மறைத்து சங்கிலி குடும்பத்தினர் காம்பவுண்டு சுவர் கட்டியது உறுதியானது. அந்த காம்பவுண்டு சுவரை அகற்ற வருவாய்த்துறையினர் தயாராகினர்.

    இதற்காக போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அங்கு சென்றபோது கடும் எதிர்ப்பு தெரிவித்த சங்கிலி குடும்பத்தினர் திடீரென தங்களது உடலில் மண்எண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த சங்கிலி குடும்பத்தினரை போலீசார் எச்சரித்தனர். அதன் பிறகு ஓரிரு நாட்களில் தாங்களாகவே ஆக்கிரமிப்பை எடுத்துக்கொள்வதாக சங்கிலி குடும்பத்தினர் கேட்டு கொண்டதன் பேரில் அரசு அதிகாரிகள் சில நாட்கள் அவகாசம் அளித்தனர்.

    அதற்கு பிறகும் ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ளவில்லை என ஊராட்சி நிர்வாகம் சார்பில் மீண்டும் புகாராளிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சங்கிலி குடும்பத்தினர் இதற்கெல்லாம் ஊராட்சி மன்றத் தலைவர் போதும்பொண்ணுதான் காரணம் என்று கூறி பெண் என்றும் பாராமல் தரக்குறைவாக பேசி வந்தனர்.

    கடந்த மாதம் 18-ந்தேதி மீண்டும் ஆக்கிரமிப்பை அகற்றும் முயற்சியும் தள்ளிப்போனது. இதனால் காம்பவுண்டு சுவரை கடந்து செல்லும் பொதுமக்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் சங்கிலி குடும்பத்தினர் பொதுமக்கள் நடந்து செல்லும் பொதுப்பாதையை மண் கொண்டு வழி மறித்து அடைத்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக் கேட்ட ஊராட்சி மன்றத்தலைவர் போதும் பொண்ணுவை வெட்ட அரிவாளுடன் சங்கிலி ஆவேசமாக வந்துள்ளார்.

    இதனால் அச்சமடைந்த போதும்பொண்ணு தனது கணவரான முனியாண்டியுடன் நரிக்குடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார். தனது உயிருக்கு பாதுகாப்பு கோரியதுடன் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த சங்கிலி மற்றும் அவரை தூண்டிவிட்ட சங்கிலியின் மனைவியான ஜோதிலட்சுமி ஆகியோர் மீதும் புகார் அளித்தார்.

    அத்துடன் ஆக்கிரமித்து கட்டியுள்ள காம்பவுண்டு சுவரால் உயிர் பலி போன்ற பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்விரைவில் அந்த சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊராட்சி சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×