பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம்: பள்ளி-கல்லூரி மாணவர்கள் 150 பேருக்கு நோட்டீஸ்

பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த பள்ளி-கல்லூரி மாணவர்கள் 150 பேருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம்
மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம்
Published on

சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதை தடுக்க சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதுதொடர்பாக தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் வழித்தடங்களில் பயணம் செய்யும் மாணவர்களை பிடித்து போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனாலும் மாணவர்கள் மீண்டும் மீண்டும் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடியே பயணம் செய்கின்றனர்.

எனவே பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தினார். இதையடுத்து சென்னை மாநகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமி‌ஷனர் கபில்குமார் சிசரட்கர் மேற்பார்வையில் சென்னை மாநகரம் முழுவதும் போக்குவரத்து போலீசார் பஸ்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின்போது பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த 111 பள்ளி மாணவர்களையும், 43 கல்லூரி மாணவர்களையும், பஸ்களில் இருந்து கீழே இறக்கிவிட்டு அந்த மாணவர்களின் பெயர், முழு முகவரியை பள்ளி, கல்லூரியின் அடையாள அட்டை மூலம் சரிபார்த்து பெற்று அந்த மாணவர்களின் பெற்றோருக்கும், சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி முதல்வர்களுக்கும் கடிதம் மூலமாக தகவல் தெரிவித்தனர்.

படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதால் உயிரிழப்பு ஏற்படுவது குறித்து, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் பற்றியும் மாணவர்களிடம் எடுத்து கூறி போக்குவரத்து போலீசார் அவர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினார்கள்.

இந்த நிலையில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த பள்ளி-கல்லூரி மாணவர்கள் 150 பேருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் தற்போது கடைசி நேரத்தில் பள்ளிகளுக்கு பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு வேகமாக செல்லும் பெற்றோரை நிறுத்தி போலீசார் ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

பள்ளி நேரத்தில் ஒரு வழிப்பாதையில் பயணம் செய்தவர்கள் மீதும், ஆட்டோக்களில் அதிக மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற டிரைவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இதுவரை பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் அல்லாத 80 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

இனிவரும் காலங்களில் இதுபோன்று படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com