search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தந்தை இறந்த துக்கத்திலும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவன்
    X

    தந்தை இறந்த துக்கத்திலும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவன்

    • பண்ருட்டியில் தந்தை இறந்த துக்கத்திலும் மாணவன் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • உறவினர்கள், சந்துரு தேர்வு எழுதி விட்டு வந்த பிறகு தினகரனின் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அக்கடவல்லி கிராமத்தில் நேற்று பங்குனி உத்திர திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும் நேர்த்தி கடனுக்காகவும் அலகு குத்தி கொண்டு வீதியுலாவந்தனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த தினகரன் (47), திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வரும் தனது ஒரே மகன் சந்துரு இன்று நடக்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக வேண்டிக்கொண்டு நேர்த்தி கடனுக்காக மகனுக்கு அலகு குத்தி அழைத்து வந்தார்.

    நேர்த்திக்கடன் முடிந்து மகனுக்கு போடப்பட்ட அலகை கழற்றிவைத்த போது தினகரனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று தண்ணீர் எடுத்து வருவதற்குள் மனைவி, மகன் முன்னிலையில் அதே இடத்தில் சுருண்டு கீழே விழுந்தார். உடனடியாக காரில் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். தினகரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிர் இழந்து விட்டதாக கூறினார்.

    இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சந்துரு கதறி அழுதான். இருப்பினும் இன்று 10-ம் வகுப்புதேர்வு நடப்பதால் தான் தேர்வு எழுத செல்ல வேண்டும் என அவர் உறவினர்களிடம் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட உறவினர்கள், சந்துரு தேர்வு எழுதி விட்டு வந்த பிறகு தினகரனின் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி சந்துருவை உறவினர்கள் இன்று காலை திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவன், தேர்வை எழுதினார். தொடர்ந்து அவருக்கு ஆசிரியர்கள் ஆறுதல் கூறினர். இன்று மாலை தினகரன் உடல் அடக்கம் நடக்க உள்ளது.

    தந்தை இறந்த துக்கத்திலும் மாணவன் தேர்வு எழுதிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×