search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் விழாக்களில் கைவரிசை காட்டி வந்த 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது
    X

    கோவில் விழாக்களில் கைவரிசை காட்டி வந்த 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
    • வீரப்பூர் என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இடைய பொட்டல் தெருவை சேர்ந்த ராமர் என்பவரது மனைவி சுமதி (வயது56). இவர் கடந்த ஜூலை 1-ந் தேதி சனி பிரதோஷத்தை முன்னிட்டு மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    அப்போது கூட்டத்தில் சுமதி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயின் திருடு போனது. இதுகுறித்த புகாரில் ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்த செயின் பறிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீரப்பூர் என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான தனிப்படையினர் திருட்டு வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியை சேர்ந்த முருகன் (55), அவரது மனைவி அலமேலு (45) ஆகியோரை கைது செய்தனர்.


    மேலும் அவர்களுடன் இருந்த கோவில்பட்டியைச் சேர்ந்த பொன்மணி (32), மாரிமுத்து (26), செல்வி (34), நாகம்மாள் (57) ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்கள் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந் தேதி மடவார் வளாகம் கோவிலுக்குச் சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் நகை பறித்தது, கடந்த ஜூன் மாதம் வ.புதுப்பட்டி ரேணுகா தேவி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் மகாலட்சுமி என்பவரிடம் 6 பவுன் செயின் பறித்தது தெரியவந்தது. கைது செய்த 6 பேரிடமிருந்து 9 பவுன் நகை மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இவர்கள் கோவில் திருவிழாக்கள் நடைபெறும் ஊர்களுக்கு குழுவாக சென்று கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருட்டில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×