தினமும் குண்டு மழை: பதுங்கு குழிக்குள் தவிக்கும் குமரி மாணவர்கள்- மீட்டுத்தர கலெக்டரிடம் பெற்றோர் மனு

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களும் உக்ரைன் பகுதியில் படித்து வருகிறார்கள். அவர்களை மீட்க வேண்டும் என்று அவரது பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
கலெக்டர் அலுவலகத்திற்குமனு கொடுக்க வந்த மாணவர்களின் பெற்றோர்
கலெக்டர் அலுவலகத்திற்குமனு கொடுக்க வந்த மாணவர்களின் பெற்றோர்
Published on

நாகர்கோவில்:

உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து வருவதையடுத்து அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்குள்ள தமிழக மாணவர்களை விமானம் மூலமாக மீட்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.தற்போது நூற்றுக்கணக்கான தமிழக மாணவர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களும் உக்ரைன் பகுதியில் படித்து வருகிறார்கள். அவர்களை மீட்க வேண்டும் என்று அவரது பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 மருத்துவ மாணவிகள் மற்றும் கருங்கல், பள்ளம் பகுதியைச் சேர்ந்த 2 ஏரோநாட்டிக்கல் படிக்கும் மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்பகளது பெற்றோர் இன்று காலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.

கீழ்குளம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் கூறியதாவது:-

எனது மகன் அஸ்வின் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் நாட்டில் கார்க்கி பகுதியில் ஏரோநாட்டிக்கல் படிப்பு தொடர்பான பட்டப் படிப்பு படிப்பதற்காக சென்றார். தற்போது அங்கு போர் நடந்து வருவதை அடுத்து கடந்த 3 நாட்களாக பதுங்குகுழியில் இருந்து வருகிறார். தினமும் வீடியோ கால் மூலமாக என்னை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.

கடந்த 2 நாட்களாக அந்த பகுதியில் குண்டு வீசும் சத்தங்கள் அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் பதுங்கு குழியை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருவதாகவும் இதுவரை பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறினார். உணவு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். எனது மகனுடன் குமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் சிலரும் தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களும் இருப்பதாக கூறினார். எனவே எனது மகனை விரைந்து மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கன்னியாகுமரியைச் சேர்ந்த சகாய ஆண்டனி கூறுகையில், தனது மகள் கிரேஸ் ஸ்டெப்லின் உக்ரைன் வினிசியா பகுதியில் மருத்துவ படிப்பு 6-ம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது அங்கு போர் நடைபெற்று வருவதை அடுத்து எனது மகள் அவளது தோழிகளுடன் உக்கரைனில் இருந்து புறப்பட்டு ருமேனியா பகுதிக்கு வந்துள்ளார். ருமேனியா எல்லைப் பகுதியில் கடந்த 2 நாட்களாக தவித்து வருகிறார். எல்லை மூடப்பட்டுள்ளதால் அவர் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை உள்ளது.

எனது மகளுடன் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சில மருத்துவ மாணவிகளும் தவித்து வருகிறார்கள். இன்று காலையிலும் ருமேனியாவில் இருந்து எனது மகள் என்னிடம் பேசினார். எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வருவதாக கூறினார். எனவே எனது மகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com