

பனமரத்துப்பட்டி:
சேலம் - நாமக்கல் ரோட்டில் உள்ள மல்லூர் அருகே பி.மேட்டூர் பிரிவு என்ற இடத்தில் பிரபல வங்கியின் ஏ.டி.எம். சென்டர் செயல்பட்டு வருகிறது.
இந்த ஏ.டி.எம். சென்டரில் காவலர்கள் இல்லை. இந்த நிலையில் நேற்று இரவு 2.30 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம். சென்டர் உள்ளே நுழைந்து ஏ.டி.எம். மிஷினை உடைக்க முயன்றுள்ளார். ஆனால் அதனை உடைக்க முடியாததால் அங்கிருந்த பொருட்கள் மற்றும் மேற்கூரையை உடைத்து சேதப்படுத்தி உள்ளார். மேலும் அங்கிருந்த 2 கேமராக்களை மட்டும் உடைத்து எடுத்துச் சென்றுள்ளான். இதனிடையே ஏ.டி.எம். மெஷினை உடைக்க முயன்றதால் இதுகுறித்து மும்பையில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு தகவல் சென்றுள்ளது.
இதனையடுத்து அவர்கள் மல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் சேலம் ரூரல் டி.எஸ்.பி. தையல்நாயகி தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை உடனடியாக ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் மல்லூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் தமிழரசன் (வயது 26) என்ற கூலித்தொழிலாளியை கைது செய்தனர். தனிப்படை போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தேன். அதில் போதிய வருமானம் இல்லாததால் மது அருந்த பணம் இல்லை. எனவே ஏ.டி.எம். மிஷினை உடைத்தால் அதில் நிறைய பணம் இருக்கும் என்று நினைத்து உடைத்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். மல்லூர் பகுதியில் ஏ.டி.எம். மெஷினை உடைத்த கூலித் தொழிலாளியை சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
இதனிடையே கடந்த 16-ந் தேதி இரவு மல்லூர் அருகே உள்ள நிலவாரப்பட்டி கிராமம் சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மிஷினை பனமரத்துப்பட்டி பெரமனூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்ற வாலிபர் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தார். அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த 10 நாட்களில் 2-வது முறையாக மல்லூர் பகுதியில் ஏ.டி.எம். மிஷின் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.