

சென்னை:
தேர்தல்கள் நடைபெறும் போது உரிமம் பெற்ற துப்பாக்கிகளை போலீசாரிடம் ஒப்படைப்பதற்கு உத்தரவிடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்து இருப்பவர்கள் அதனை தங்களது பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அதனை ஒப்படைத்து வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் உள்ளன. இவற்றில் 1,500-ல் இருந்து 2 ஆயிரம் துப்பாக்கிகள் வரையில் வங்கி பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
இவைகளை தவிர்த்து மீதமுள்ள சுமார் 18 ஆயிரம் துப்பாக்கிகளை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் 3 ஆயிரம் வரையில் உள்ளது. இவற்றில் 300 முதல் 500 துப்பாக்கிகள் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
இவைகள் போக சுமார் 2,500 துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தங்களது பாதுகாப்பு தேவைகளுக்காக துப்பாக்கிகளை வாங்கி வைத்திருப்பவர்கள் அதனை சென்னை போலீஸ் கமிஷனரக எல்லைக் குட்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைத்து வருகிறார்கள்.
உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைப்பது தொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஆவடி பகுதியில் 317 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் எனவும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.