search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளத்தால் சேதமான வாகனங்களுக்கு காப்பீட்டுத் தொகை பெற சிறப்பு முகாம்கள்
    X

    வெள்ளத்தால் சேதமான வாகனங்களுக்கு காப்பீட்டுத் தொகை பெற சிறப்பு முகாம்கள்

    • வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் மேலும் துயரத்திற்கு உள்ளாகினர்.
    • ஆயில் மற்றும் ஸ்பார்க் பிளாக் மாற்றுதல் போன்ற வகை செலவுகளுக்கு உடனடியாக தொகை வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெருமழை பெய்தது.

    இதன் காரணமாக 4 மாவட்டங்களிலும் பாதிப்புகள் இருந்தாலும், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கடுமையான சேதம் ஏற்பட்டது.

    குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளம் மக்களின் உடைமைகளை அடித்துச்சென்றது. இந்த வெள்ளத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. தொடர் மழையால் வீடுகள் சேதமடைந்தது மட்டு மல்லாமல் மக்கள் தங்களது வீடுகளில் நிறுத்தியிருந்த சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள், விவசாயிகளின் டிராக்டர்கள் உள்ளிட்டவைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏற்கனவே மழை வெள்ளத்தால் உடைமைகளை இழந்து உயிரை காப்பாற்றிக் கொள்ளவே மக்கள் போராடிய நிலையில், அவர்களது ஆயிரக்கணக்கான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் மேலும் துயரத்திற்கு உள்ளாகினர்.

    உயிரை காப்பாற்றிக் கொள்ள அரசு சார்பிலும், தன்னார்வ தொண்டு அமைப்புகளின் சார்பிலும் உணவு, அரிசி, போர்வை உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்ட நிலையில் உடைமைகளை மீண்டும் வாங்குவது என்பது நடுத்தர மக்களுக்கு அவ்வளவு எளிதல்ல.

    அவர்கள் தங்களது வாகனங்களுக்கு காப்பீடு செய்திருப்பார்கள் என்பதால் அதன் மூலமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை பழுது பார்க்க அரசு சார்பில் வழிவகை செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.

    இந்த சூழ்நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாரமனிடம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மக்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பயிர்கள், வாகனங்கள் உள்ளிட்ட மழையால் பாதிக்கப்பட்ட அனைத்துக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் சிறப்பு முகாம்கள் நடத்தவும், அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தொகை வழங்க நடைமுறைகள் எளிதாக்கப்படும் எனவும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார்.

    அதன் அடிப்படையில் இன்று முதல்கட்டமாக நெல்லை மாவட்டத்தில் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்கள் சார்பில் இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள், வீடுகளுக்கு காப்பீடு செய்திருந்தவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கில் வெள்ள சேதார இழப்பீடு சிறப்பு முகாம் நடைபெற்றது.

    இதேபோல் பாளை போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் சார்பிலும், தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் சார்பில் பாளை சித்த மருத்துவ கல்லூரி எதிரே அமைந்துள்ள தனியார் ஹாலிலும் இருசக்கர, நான்கு சக்கர மற்றும் வீடு உள்ளிட்டவைகளுக்கான வெள்ள சேதார இழப்பீடு வழங்க முகாம்கள் நடைபெற்றது.

    குறைந்த காலத்தில் காப்பீட்டுத்தொகையை வாடிக்கையாளர்கள் பெறுவதற்காக ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஏற்கனவே வாடிக்கையாளர்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அந்தந்த காப்பீட்டு நிறுவனங்கள் சார்பில் அனுப்பப்பட்டது. இதையடுத்து இன்று நடைபெற்ற முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் தங்களது வாகனங்களை கொண்டு வந்திருந்தனர். அங்கு இருந்த சர்வேயர்கள் வாகனங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகள், ஆயிலின் தன்மை உள்ளிட்டவற்றை சர்வே செய்து காப்பீட்டு நிறுவனத்தாரிடம் கணக்கீட்டு தொகை விபரத்தை வழங்கினார்.

    அந்த தொகையை உடனடியாக காப்பீடு நிறுவனத்தினர் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு வழங்கினர். முதல்கட்டமாக பழுது பார்க்க மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையிலும், கார்கள் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.15 ஆயிரம் வரையிலும், வணிக ரீதியிலான வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் வரையிலும் பாதிப்பின் அடிப்படையில் காப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டது. அவைகளுக்கு பேட்டரி மாற்றுதல், ஆயில் மற்றும் ஸ்பார்க் பிளாக் மாற்றுதல் போன்ற வகை செலவுகளுக்கு உடனடியாக தொகை வழங்கப்பட்டது.

    முற்றிலும் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமாகிய வாகனங்கள் முழுவதுமாக சர்வே செய்யப்பட்டு உரிமையாளர்களின் ஒப்புதல் பெற்று புதிய வாகனங்கள் பெற வழிவகை செய்தல், அல்லது அதற்கான தொகையை வழங்குதல் குறித்து பரிசீலனை செய்யப்படும் என காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் இன்று முகாம்கள் நடந்த நிலையில், நாளை தூத்துக்குடியில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் சார்பில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே உள்ள அண்ணா நகர் மெயின்ரோட்டில் முகாம் நடக்கிறது. இதுதொடர்பாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் குறுஞ் செய்தி அனுப்பப்பட்டு உள்ளது. நிறுவனங்களின் உள்ளூர் அலுவலகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த 2 மாவட்டங்களிலும் அனைத்து அலுவலக விடுமுறை நாட்களிலும் காப்பீட்டு நிறுவனங்கள் செயல்படும் எனவும், அதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×