

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகாவில் செங்காடு மற்றும் இள்ளளூர் கிராமத்தில் உள்ள நில விவகாரம் தொடர்பாக தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கும், குமார் என்பவருக்கும் இடையில் பிரச்சினை இருந்து வந்தது.
கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த நில விவகாரம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடை யில் நடந்த மோதலில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாக இதயவர்மன் கைது செய்யப்பட்டார். பின் அவருக்கு ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது இதயவர்மனுக்கு தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்து உதவி செய்யவில்லை என்றும் அதனால் கோவில் நிலத்தை தான் ஆக்கிரமிக்க உள்ளதாக பொதுமக்களிடையே அவதூறு பரப்பி, தனது நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்து இதயவர்மன் ஆட்கள் நிலத்தை சேதப்படுத்தியதாக குமார் புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்து விசாரிக்க, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் கோட்டாட்சியருக்கு, திருப்போரூர் தாசில்தார் பரிந்துரை செய்தார். இதை எதிர்த்து குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், திருப்போரூர் தாசில்தார் விசாரணையில் சம்பந்தப்பட்ட இடம் ஆக்கிரமிப்பும் அல்ல... கோவிலுக்கு சொந்தமான இடமும் அல்ல என தெரிய வந்தபோதும், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க அவருக்கு அதிகாரம் இருந்தும் இதயவர்மனின் அரசியல் செல்வாக்கால் பொறுப்பை தட்டி கழிக்கும் விதமாக செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். அந்த உத்தரவை ரத்து செய்து, தாசில்தாரே விசாரிக்க உத்தரவிட வேண்டும். இதயவர்மனோ அவரது ஆட்களோ தன்னுடைய நிலத்திற்கு சென்று வர இடையூறு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைத்த தாசில்தாரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த நில விவகாரத்தில் தலையிட கூடாது என அப்போதைய தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் தரப்பினருக்கும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை, நீதிபதி தண்டபாணி முன்பு நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி இது சிவில் வழக்கு என்றும் சிவில் நீதிமன்றத்தை தான் அணுக முடியும் என்றும் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...ரூ.40 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை