search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டி.எம்.சவுந்தரராஜனுக்கு ரூ.50 லட்சத்தில் வெண்கல சிலை- நாளை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
    X

    மதுரை முனிச்சாலையில் நாளை திறக்கப்பட உள்ள டி.எம்.எஸ். சவுந்தரராஜனின் சிலை.

    டி.எம்.சவுந்தரராஜனுக்கு ரூ.50 லட்சத்தில் வெண்கல சிலை- நாளை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

    • 2002-ம் ஆண்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக டி.எம்.எஸ். நியமிக்கப்பட்டார்.
    • 24 வயதில் திரையுலகில் பாடத்துவங்கிய இவர், தன்னுடைய 88-வது வயது வரை பாடி வந்தார்.

    மதுரை:

    தமிழ் சினிமா வரலாற்றில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது வசீகர குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்த பழம் பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை அவர் தனது வாழ்நாளில் பாடியிருக்கிறார். டி.எம்.எஸ். என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் டி.எம்.சவுந்தரராஜன் மதுரையில் 1922-ம் ஆண்டு, மார்ச் 24-ந்தேதி பிறந்தார்.

    அந்தக் காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் இசை பயிற்சி பெற்ற டி.எம்.எஸ், மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தார். கச்சேரிகளில் தனது தனித்துவமான குரல் வளத்தால் மக்களைக் கவர்ந்து வந்த டி.எம்.சவுந்தரராஜனுக்கு, 1950 ஆம் ஆண்டு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.

    ராதே என்னை விட்டுப் போகாதடி, என்று கிருஷ்ணவிஜயம் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல், டி.எம்.சவுந்தரராஜனின் முதல் திரையுலகப் பாடலாக அமைந்தது. அதைத்தொடர்ந்து மந்திர குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற பல படங்களில் தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

    டி.எம்.எஸ்.ன் குரல் வளத்துடன், அவரது உச்சரிப்பும் மக்களிடையே பிரபலமடைந்தது. பாடல் பாடுவதோடு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். டி.எம்.சவுந்தரராஜன். 1960-ம் ஆண்டுகளில் வெளியான பட்டினத்தார், அருணகிரி நாதர் போன்ற படங்களில் அவர் நடித்திருந்தார். இதில் மிக குறிப்பாக அருணகிரி நாதர் திரைப்படத்தில் இவர் பாடிய, முத்தைத்தரு பக்தித் திருநகை பாடல் இன்றைய தலைமுறையினர் வரை சிறந்த பாடலாக உச்சரிக்கப்படுகிறது. டி.எம். சவுந்தரராஜனின் மற்றொரு தனி அடையாளமாகக் கூறப்படுவது, ஒவ்வொரு கதாநாயகர்களுக்கும் ஏற்ப தனது குரலை மாற்றி பாடுவதுதான்.

    எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் தொடங்கி 1970-ம் ஆண்டுகளில் டி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான ஒருதலை ராகம் திரைப்படத்தின் நாயகன் வரை, பல்வேறு தலைமுறையைச் சேர்ந்த நடிகர்களுக்கு பாடல்கள் பாடியிருக்கிறார். பாசமலர் படத்தில் மலர்ந்தும் மலராத பாடல், பாலும் பழமும் படத்தில் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும், திருவிளையாடல் படத்தில் பாட்டும் நானே பாவமும் நானே, படகோட்டி படத்தின் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் ஆகிய பாடல்கள் திரையுலகில் முத்திரை பதித்தது.

    11 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடலை பாடியிருக்கும் டி.எம்.எஸ்., ஆயிரத்திற்கும் மேலான பக்தி பாடல்களுக்கு இசையமைத்து பாடியுள்ளார். இவர் பாடிய பக்தி பாடல்கள் இன்று வரை தமிழ்நாட்டின் அனைத்து கோவில்களிலும் திருவிழாக்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ் கடவுளாக அறியப்படும் முருகனுக்கு இவர் பாடிய பாடல்கள் மிகப் பிரபலமானவை. 1955 ஆம் ஆண்டிலிருந்து 80களின் காலகட்டம் வரை டி.எம்.சவுந்தரராஜன் புகழின் உச்சியில் இருந்தார்.

    சுமார் 65 ஆண்டுகள் அவர் திரையுலகில் தன்னுடைய இசை பயணத்தைத் தொடர்ந்து வந்தார். தன்னுடைய தனித்துவமான இசைப் பயணத்தில், இவர் செய்த சாதனைக்காக பேரவைச் செம்மல், கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டன. இதுதவிர கலா ரத்னம், கான ரத்னம், அருள் இசை சித்தர், நவரச பவ நளின கான வர்ஷினி, ஞானாமிர்த வர்ஷினி, சாதனை சக்கரவர்த்தி, பாரதிய இசை மேகம், கான குரலோன் போன்ற பட்டங்களும் ரசிகர்களால் சூட்டப்பட்டது.

    2002-ம் ஆண்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக டி.எம்.எஸ். நியமிக்கப்பட்டார். 24 வயதில் திரையுலகில் பாடத்துவங்கிய இவர், தன்னுடைய 88-வது வயது வரை பாடி வந்தார். இன்றைய தலைமுறையினரின் ஏகோபித்த ஆதரவை பெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற பாடலில், மற்ற இளம் பாடகர்களுடன் இணைந்து டி.எம்.எஸ். பாடியிருந்தார். அதுவே அவரது கடைசி பாடலாகும்.

    2013-ம் ஆண்டு, தன்னுடைய 91-வது வயதில் சென்னையில் இருக்கும் அவரது வீட்டில், வயது மூப்பு காரணமாக டி.எம்.சவுந்தரராஜன் காலமானார். அவரது நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் மந்தவெளி வெளிவட்ட சாலை பகுதிக்கு டி.எம்.சவுந்தரராஜன் சாலை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார்.

    பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன், புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்ற வகையில் அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி மதுரையில் முழு திருவுருவச்சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    மதுரை தெற்கு வட்டம் முனிச்சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலம் (பழைய) அலுவலகக் கட்டிட வளாகத்தில் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் முழு திருவுருவச் சிலை அமைத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.50 லட்சம் செலவில் சிலை நிறுவுவதற்கான பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருவுருவச் சிலை தயார் நிலையில் உள்ளது.

    மதுரையின் மற்றொரு அடையாளமாக திகழப்போகும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை திறந்து வைப்பதற்காக நாளை (15-ந்தேதி) மதுரை வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முனிச்சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள டி.எம்.சவுந்தரராஜனின் சிலையையும் திறந்துவைக்கிறார்.

    Next Story
    ×