search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    4 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு

    • ஒவ்வொரு கலெக்டர்களும் தங்களது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து முதலமைச்சரிடம் தெரிவித்தனர்.
    • சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிதியுதவி திட்டங்கள் மூலம் எத்தனை பேர் பயனடைந்துள்ளார்கள் என்பது பற்றி புள்ளி விபரங்களுடன் தெரிவித்தனர்.

    சேலம்:

    தமிழகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

    அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சேலத்தில் தங்கியிருந்து சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக தனி விமானம் மூலம் நேற்று காலையில் சேலம் காமலாபுரம் விமானம் நிலையம் வந்தார். அங்கு அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் மக்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து சாலையோரம் நின்ற மாணவ-மாணவிகளை சந்தித்து பேசினார். பின்னர் சேலம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு பஸ் நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 4 மாவட்டங்களை சேர்ந்த தொழில் துறை மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் கல்லூரி மாணவ-மாணவிகளுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார்.

    இதையடுத்து சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டல அளவிலான கள ஆய்வு கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.

    அதனை தொடர்ந்து நேற்று இரவு தருமபுரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் நள்ளிரவு 1 மணி அளவில் சேலம் திரும்பினார். பின்னர் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பொதுப்பணிதுறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு எடுத்தார்.

    தொடர்ந்து, 2-வது நாளாக இன்று காலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு 4 மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலத்திற்கு வந்தார்.

    காலை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் கலெக்டர்கள் கார்மேகம் (சேலம்), ஸ்ரேயா பி.சிங் (நாமக்கல்), தீபக் ஜேக்கப் (கிருஷ்ணகிரி), சாந்தி (தருமபுரி) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது ஒவ்வொரு கலெக்டர்களும் தங்களது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து முதலமைச்சரிடம் தெரிவித்தனர்.

    அப்போது விவசாயிகள், மாணவர்கள், வேலைவாய்ப்பில்லாதவர்கள், பணிபுரிபவர்கள், சமூகத்தின் அடித்தட்டு மக்கள், தொழில்முனைவோர் மற்றும் தொழிற்சாலை ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள தமிழக அரசின் சேவைகள் பற்றியும், சாதிச்சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், வருமான சான்றிதழ், நில உடமைகளில் உரிய திருத்தம் மற்றும் பல்வேறு உரிமங்கள் சீராக வழங்கி வருவது பற்றியும் தெரிவித்தனர். சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிதியுதவி திட்டங்கள் மூலம் எத்தனை பேர் பயனடைந்துள்ளார்கள் என்பது பற்றி புள்ளி விபரங்களுடன் தெரிவித்தனர்.

    அரசின் கொள்கைகளும், நோக்கங்களும் மக்களிடம் சென்றடைய அரசு அலுவலர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். இதன் மூலம் விவசாயம் சார்ந்த தொழிலகங்களின் மூலப்பொருள்கள் கிடைப்பது உறுதிசெய்யப்படுவதுடன், ஊரக மக்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகள் கிடைக்கப்பெறுகிறது. விவசாய உற்பத்தியை உயர்த்த வேண்டி பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது என தெரிவித்தனர்.

    இதனை கேட்டறிந்த முதலமைச்சர், 4 மாவட்டங்களிலும் தமிழக அரசு பல கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களை சிறப்பாக கொண்டு சேர்க்கும் அரசு அலுவலர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் அரசின் திட்டங்கள் தொடர்ந்து சென்று சேர செயலாற்ற வேண்டும். வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள தடைகளை நீக்கி விரைந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

    இதையடுத்து முதலமைச்சர், 4 மாவட்டங்களிலும் தற்போது முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும் புதிதாக பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, முதலமைச்சரின் முதன்மை செயலாளர் உதயசந்திரன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், சிறு தொழில் அமைச்சர் காந்தி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×