search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை அருகே நான்கு வழிச்சாலையில் விபத்து- சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து கேரள தொழிலதிபர் பலி
    X

    மதுரை அருகே நான்கு வழிச்சாலையில் விபத்து- சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து கேரள தொழிலதிபர் பலி

    • கள்ளிக்குடி நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
    • பிரதாப் சந்திரன் காரின் இடுபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    திருமங்கலம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் பிரதாப் சந்திரன் (வயது 58). இவர் திருவனந்தபுரம் பகுதியில் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பியூட்டி பார்லர் வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

    இந்நிலையில் பிரதாப் சந்திரன் மற்றும் அவர் நடத்தி வரும் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் மேலாளர் தூத்துக்குடியை சேர்ந்த பழனிமுருகன் (45) மற்றும் அழகு நிலைய மேலாளர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சரிதா (37) மூன்று பேரும் காரில் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு வியாபாரம் தொடர்பான பொருட்கள் வாங்குவதற்காக காரில் வந்து கொண்டிருந்தனர்.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. காரை நிறுத்த டிரைவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

    கடைசியில் அந்த கார் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பிரதாப் சந்திரன் காரின் இடுபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அவருடன் பயணம் செய்த மற்ற இரண்டு பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில் பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த இரண்டு பேரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காலை நேரம் என்பதால் கண் அயர்ந்து டிரைவர் தூங்கியதால் விபத்து நிகழ்ந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×