

போரூர்:
அம்பத்தூர் காந்திநகர் தாலுகா அலுவலகம் அருகே புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.
இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிஷோர் தனது மனைவி புத்தினி மற்றும் குழந்தைகள் ஆகாஷ், பிரகாஷ், துர்கி மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தை லாக்டவுன் ஆகியோருடன் அங்குள்ள குடிசை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார்.
கடைசி குழந்தை கொரோனா ஊரடங்கு நேரத்தில் பிறந்ததால் அதற்கு லாக்டவுன் என்று செல்லமாக பெயரிட்டு இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி கணவன்- மனைவி இருவரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை 4 மணிக்கு புத்தினி, தங்கியிருந்த ‘ஷெட்டுக்குள்’ சென்றபோது அங்கு கட்டிலில் படுத்துக் கிடந்த குழந்தை ‘லாக்டவுன்’ மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பல இடங்களில் தேடியும் குழந்தையை கண்டுப்பிடிக்க முடியவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் கிஷோர் அம்பத்தூர் போலீசில் புகார் செய்தார்.
மர்ம நபர்கள் குழந்தையை கடத்தி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.
உதவி கமிஷனர் கனகராஜ், இன்ஸ்பெக்டர் ராமசாமி குழந்தை மாயமான இடத்தில் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் குழந்தையை மீட்க அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் கோயம்பேடு பஸ் நிலைய பிளாட்பாரம் 1-ல் சேலத்திற்கு புறப்பட தயாராக நின்று கொண்டு இருந்த பஸ்சில் இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் நீண்ட நேரம் கேட்டது. அந்த குழந்தையை யாரும் உரிமைகோர வில்லை.
இதுபற்றி அங்கிருந்த பயணிகள் பஸ் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப் -இன்ஸ்பெக்டர் பூபதிராஜ் ஆகியோர் விரைந்து வந்து குழந்தையை மீட்டனர்.
விசாரணையில் மீட்கப்பட்ட குழந்தை அம்பத்தூரில் மாயமான வடமாநில தொழிலாளி கிஷோரின் குழந்தை "லாக்டவுன்" என்பது தெரியவந்தது.
குழந்தை லாக்டவுனை மர்ம நபர்கள் கடந்த 3 நாட்களாக கடத்தி வைத்துள்ளனர். போலீசாரின் தேடுதல் தீவிரம் அடைந்ததையடுத்து போலீசில் சிக்காமல் இருப்பதற்காக குழந்தையை சேலம் செல்லும் பஸ்சின் இருக்கையில் விட்டு சென்று இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து குழந்தையை விட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழந்தை லாக்டவுன் மீட்கப்பட்டது குறித்து அம்பத்தூர் போலீசாருக்கும், குழந்தையின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த லாக்டவுனை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். குழந்தை மீட்கப்பட்டதால் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் பல இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து உள்ளது. இதன் காரணமாக இங்கு நடக்கும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை விரைந்து பிடிப்பதில் போலீசுக்கு தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் ஆசியாவின் மிகப்பெரிய பஸ் நிலைய வளாகத்தில் அனைத்து கேமராக்களையும் சி.எம்.டி.ஏ நிர்வாகம் முறையாக பராமரித்து சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.