

மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆலப்பாக்கம் ஜெகநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 50). அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்தார்.
இவர் ஆலப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் நேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அதன் பின்னர் வீட்டுக்கு வந்தார். நேற்று இரவு 9.30 மணி அளவில் வேலாயுதத்துக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
அதிர்ச்சியடைந்த அவரது மனைவி லெட்சுமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வேலாயுதத்தை மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்போது வேலாயுதத்தின் உடல்நிலை மோசமானது. உடனடியாக அவர் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வேலாயுதம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் வேலாயுதத்தின் மனைவி லெட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். கொரோனா தடுப்பூசி செலுத்தியதால்தான் அவர் இறந்து விட்டார் என்று உறவினர்கள் ஆவேசமடைந்தனர்.
தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து சென்று இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்ததால் உறவினர்கள் சமாதானம் அடைந்தனர்.