பவானி அருகே ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது

போலீசார் வாலிபர்கள் 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.அவர்களிடம் இருந்த வெள்ளை ஆடு மற்றும் மோட்டார் சைக்கிளில் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பவானி அருகே ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது
Published on

பவானி:

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பை நத்தக்காடு கருப்பு சாமி கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (65). இவர் மேய்ச்சலுக்கு நத்தக்காடு ஏரி அருகில் தனது விவசாய பூமியில் ஆடுகளை கட்டி வருவது வழக்கம். அதேபோல் சம்பவத்தன்றும் ஆடுகளை அந்த பகுதியில் கட்டி மேய்ச்சலுக்கு விட்டு உள்ளார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர் கட்டப்பட்டு இருந்த வெள்ளை ஆடு ஒன்றின் கயிற்றை அவிழ்த்ததை பார்த்து சுப்பிரமணி கூச்சல் போட்டு உள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

அவர்களை கண்டதும் வாலிபர்கள் 2 பேரும் ஓட்டம் பிடிக்க அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கீழே விழுந்ததால் சுப்பிரமணி மற்றும் அக்கம் பக்கத்தினர் அந்த 2 பேரையும் பிடித்து பவானி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் பவானி செங்காடுகோட்டை விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த விஜய் என்கிற விஜயகுமார் (23) மற்றும் பவானி சொக்காரம்மன் நகர் பகுதியை சேர்ந்த குமார் (25) என்பதும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து போலீசார் வாலிபர்கள் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்த வெள்ளை ஆடு மற்றும் மோட்டார் சைக்கிளில் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com