பெரியமாரியம்மன் கோவிலில் தடையை மீறி தேங்காய் உடைத்த பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. உள்பட 16 பேர் கைது

ஈரோடு பெரியமாரியம்மன் கோவிலில் தடையை மீறி தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேங்காய் உடைக்க வந்தவர்கள் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் கோ‌ஷமிட்டனர்.
தேங்காய் உடைக்க வந்தவர்கள் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் கோ‌ஷமிட்டனர்.
Published on

ஈரோடு:

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில் ஒவ்வொரு வருடமும் பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்க கோரி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

அதன்படி இந்த வருடம் இன்று பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்க கோரி பெரிய மாரியம்மன் கோவில் முன்பு 5 ஆயிரம் சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெறும் என பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படும் என்றும் எச்சரித்திருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று காலை பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் ஈரோடு ஈஸ்வரன் கோவில் முன்பு திரண்டனர். மொடக்குறிச்சி பா.ஜனதா எம்.எல்.ஏ. சி.கே.சரஸ்வதி தலைமையில் 16 நிர்வாகிகள் திடீரென பெரிய மாரியம்மன் கோவில் முன்பு தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் டவுன் போலீசார் சரஸ்வதி எம்.எல்.ஏ உட்பட 16 நிர்வாகிகளை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அதேநேரம் ஈஸ்வரன் கோவிலில் 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திரண்டு இருந்தனர். அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று ஈஸ்வரன் கோவிலில் தேங்காய் உடைத்தனர்.

இன்னும் சில குழுவினர் எல்லை மாரியம்மன் கோவில், நடு மாரியம்மன் கோவில், வீரபத்திர மாரியம்மன் கோவில் உட்பட 10-க்கும் மேற்பட்ட கோவில்களில் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com