

நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள லக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் தினேஷ்குமார்(வயது 17). இவர் நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார்.
பள்ளி மாணவன் தினேஷ்குமார், தனது நண்பர்கள் 4 பேருடன் நல்லிபாளையத்தில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் பின்புறத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருக்கும் கிணற்றில் நீச்சல் பழக சென்றார்.
அப்போது கிணற்றுக்குள் குதித்த தினேஷ்குமார் தண்ணீரில் மூழ்கி பலியானான். இதை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். மேலும் இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாமக்கல் தீயணைப்பு துறையினர் பள்ளி மாணவனை மீட்டனர். பின்னர் மாணவனின் உடலை நாமக்கல் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.