search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராகுல் காந்தியை பார்த்து பா.ஜ.க. அஞ்சுகிறது: முகுல் வாஸ்னிக் பேட்டி
    X

    ராகுல் காந்தியை பார்த்து பா.ஜ.க. அஞ்சுகிறது: முகுல் வாஸ்னிக் பேட்டி

    • அதானிக்காக ஜனநாயகத்தை பிரதமர் நரேந்திர மோடி அழிக்க தயாராகிவிட்டார்.
    • நாட்டின் ஜனநாயகத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் மிகப்பெரிய ஆபத்து வந்துள்ளது.

    சென்னை :

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத், காங்கிரஸ் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார், விஷ்ணு பிரசாத், விஜய் வசந்த், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் 'பா.ஜ.க.வின் ஜனநாயக படுகொலை' என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட புத்தகத்தை முகுல் வாஸ்னிக் வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அதானியின் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி உரையாற்றி 9 நாட்களுக்கு பின்னர் அவர் மீதான அவதூறு வழக்கு உயிர்ப்பிக்கப்பட்டது. பிரதமரை எதிர்த்து கேள்வி கேட்டதால் பின் தங்கிய வகுப்பினரை ராகுல்காந்தி குறிவைப்பதாக பா.ஜ.க.வினர் பொய் கட்டுக்கதையை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்திய ஒருவரால் எப்படி குறிப்பிட்ட சமூகத்தை குறிவைக்க முடியும்.

    குஜராத் கோர்ட்டு தீர்ப்பளித்த 24 மணி நேரத்தில் ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து மின்னல் வேகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் நீதிபதி கால அவகாசம் அளித்தும் தகுதிநீக்கம் செய்வதில் அவசரம் காட்டியது ஏன்? ராகுல்காந்தியை பார்த்து பா.ஜ.க. அஞ்சுவது ஏன்?

    அதானிக்காக ஜனநாயகத்தை பிரதமர் நரேந்திர மோடி அழிக்க தயாராகிவிட்டார். தற்போது நாட்டின் ஜனநாயகத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் மிகப்பெரிய ஆபத்து வந்துள்ளது. இதனை பாதுகாக்க இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அனைத்தையும் செய்யும்.

    திருடர்களையும், முறைகேடு செய்தவர்களையும் அம்பலப்படுத்திய ராகுல்காந்தியை மோடி அரசு குறி வைக்கிறது. இதைக்கண்டு ராகுல்காந்தியோ, காங்கிரஸ் கட்சியோ அஞ்சப்போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×