என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க மறுப்பதா?- எடப்பாடி பழனிசாமி கண்டனம்
    X

    விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க மறுப்பதா?- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    • இடைவெளிவிட்டு விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கும் போக்கு வேளாண் தொழிலை கடுமையாக பாதித்துவிடும்.
    • 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு விலையில்லா மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் நடு முதுகை உடைக்கும் பல்வேறு வேலைகளை தி.மு.க. அரசு சமீப காலமாக செய்து வருகிறது.

    கோடை காலங்களில் ஆற்றுப்பாசனம் மற்றும் ஏரிப்பாசனங்களில் தண்ணீர் வரத்து இல்லாத நேரங்களில், கிணற்றுப் பாசனம், ஆழ்குழாய் பாசனம் போன்றவற்றையே நம்பி விவசாயப் பணிகள் நடைபெறும். இந்த நேரத்தில்தான் மின்சாரம் விவசாயத்திற்கு அதிகமாக தேவைப்படும்.

    இந்த நேரத்தில், அரசு தற்போது விவசாயிகளுக்கு விலையில்லா மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் வழங்க முடியாது என்றும், முறை வைத்துதான் மின்சாரம் பிரித்து வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல.

    எந்தவிதத்திலும் நம் விவசாயிகள் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 24 மணி நேரமும் மும்முனை மின்சாரத்தை விவசாயப் பெருமக்களுக்கு வழங்கி, விவசாய உற்பத்தியைப் பெருக்கி அம்மா ஆட்சியும், எனது தலைமையிலான அரசும் சாதனை படைத்தது.

    எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் என்ன என்று, இன்றுவரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இந்த அரசு, செயற்கையான ஒரு மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறதோ என்ற எண்ணம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

    24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சாரம் வரும்போதே விவசாயப் பணிகளில் பல்வேறு இடையூறுகளை சந்திக்கும் விவசாயிகள், தற்போதைய இந்த ஆட்சியாளர்களின் நடவடிக்கையால் கடும் பாதிப்புக்கு விவசாயிகள் உள்ளாகி இருக்கிறார்கள்.

    ஓரிரு நாட்களுக்கு முன்பு தி.மு.க. அரசு, தமிழ்நாட்டை டெல்டா மாவட்டங்கள் என்றும், டெல்டா அல்லாத மாவட்டங்கள் என்றும் இரண்டாகப் பிரித்து, காலையில் 6 மணி நேரம், இரவில் 6 மணி நேரம் என்று ஒரு நாளைக்கு மொத்தம் 12 மணி நேரம் மட்டுமே விவசாயிகளுக்கு விலையில்லா மின்சாரம் வழங்க உத்தேசித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

    இதுபோன்று பிரித்து, இடைவெளிவிட்டு விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கும் போக்கு வேளாண் தொழிலை கடுமையாக பாதித்துவிடும். இதனால், விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை என்பது மட்டுமல்லாமல், விவசாயப் பணிகள் தடைபட்டு, சீர்குலைந்து போகும் சூழ்நிலை ஏற்படும்.

    விவசாயப் பெருங்குடி மக்களின் வயிற்றில் அடிக்காமல், போதுமான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து வேளாண் தொழில் மென்மேலும் சிறந்தோங்கும் வகையில், 24 மணி நேரமும் விவசாயி களுக்கு விலையில்லா மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×