search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு- முகாம்களில் உள்ள மக்களுடன், முதலமைச்சர் தொலைபேசி மூலம் உரையாடல்
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு- முகாம்களில் உள்ள மக்களுடன், முதலமைச்சர் தொலைபேசி மூலம் உரையாடல்

    • 22.76 லட்சம் செல்லிடப்பேசிகளுக்கு எச்சரிக்கை குறுஞ் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.
    • மொத்தம் 49 முகாமிகளில் 4,035 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் அதிக அளவு உபரி நீரினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

    மேட்டூர் அணையிலிருந்து நேற்று (05.08.2022) மாலை 8.00 மணி முதல் 1,80,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முனனெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவிரி, கொள்ளிட கரையோர மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 4ந் தேதி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

    மேலும், இம்மாவட்டங்களுக்கு விரைந்து சென்று உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்களையும் அறிவுறுத்தியிருந்தார். இதன் தொடர்ச்சியாக, நேற்று (5.8.2022) இரவு சென்னை எழிலகம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வளாகத்திலுள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு முதலமைச்சர் வருகை புரிந்து வெள்ள நிலைமை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

    அப்போது, கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், வெள்ள நிலைமை குறித்தும், மழை விபரம் குறித்தும், காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்கள், நிலை நிறுத்தப்பட்டுள்ள மீட்புப் படைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சருக்கு எடுத்துக் கூறினார்.

    மேட்டூர் மற்றும் அமராவதி அணையிலிருந்து தொடர்ந்து அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் 22.76 லட்சம் செல்லிடப்பேசிகளுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.

    வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக கொண்டு வந்து 49 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 10 மாவட்டங்களில் உள்ள இந்த 49 முகாம்களில் 1327 குடும்பங்களைச் சேர்ந்த 4035 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    கன மழையின் போது தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாவட்ட நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து ஈடுபடும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2 குழுக்களும், நாமக்கல் மாவட்டத்தில் 1 குழுவும், ஆக மொத்தம் 66 வீரர்களைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    மேலும், திருச்சிராப்பள்ளி, ஈரோடு, நாமக்கல், ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 118 வீரர்களைக் கொண்ட 3 குழுக்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ள விபரங்களை முதலமைச்சர் கேட்டறிந்தார்.

    ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், கந்தன் பட்டறை நிவாரண முகாம், நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் வட்டம், பள்ளிப்பாளையம் நகராட்சி திருமண மண்டபம் நிவாரண முகாம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், மகாராஜா மண்டபம், பிச்சாண்டார் கோயில் நிவாரண முகாம் ஆகிய நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதலமைச்சர் பேசினார்.

    அவர்களுக்கு அங்கு போதுமான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டறிந்தார். மேலும், ஈரோடு, நாமக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர்களிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கள நிலவரம் குறித்து கேட்டறிந்து, உரிய நிவாரண நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×