search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை சந்திப்பில் முதியவரிடம் ரூ.30 ஆயிரம் பிக்பாக்கெட் அடித்த இளம்பெண் கைது- சி.சி.டி.வி. காட்சியால் சிக்கினார்
    X

    நெல்லை சந்திப்பில் முதியவரிடம் ரூ.30 ஆயிரம் பிக்பாக்கெட் அடித்த இளம்பெண் கைது- சி.சி.டி.வி. காட்சியால் சிக்கினார்

    • தில்லைநாயகம் சந்திப்பு பஸ் நிலையப் பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
    • கைதான பூமிஜாவின் சொந்த ஊர் மூவிருந்தாளி கிராமம் ஆகும்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்தவர் தில்லைநாயகம் (வயது 71). இவர் நேற்று மாலை நெல்லை சந்திப்பு பகுதிக்கு வந்திருந்தார்.

    அங்குள்ள ஒரு வங்கியில் ரூ.30 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு கையில் வைத்திருந்த கட்டைப் பையில் வைத்துவிட்டு வங்கியில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். பின்னர் சந்திப்பு பஸ் நிலையப் பகுதியில் ஒரு பேக்கரி கடை முன்பு பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த பையை பார்த்தபோது அதன் கீழ் பகுதி கிழிக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தில்லை நாயகம் சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    உடனடியாக இன்ஸ்பெ க்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு சென்று கடைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது தில்லை நாயகத்தை பின்தொடர்ந்து ஒரு இளம் பெண் வந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. மற்றும் சில காமிராக்களில் ஆய்வு செய்தபோது அந்த இளம் பெண், தில்லைநாயகம் கையில் வைத்திருந்த கைப்பையை பிளேடால் கிழித்து அதில் இருந்த ரூ.30 ஆயிரம் பணம், வங்கி புத்தகம் உள்ளிட்டவற்றை திருடிவிட்டு யாருக்கும் தெரியாமல் நைசாக நழுவி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

    இதையடுத்து அந்த காட்சிகளை வைத்து அந்த பெண் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த இளம் பெண் தச்சநல்லூர் தேனீர் குளத்தைச் சேர்ந்த பிளம்பரான ரஞ்சித் குமார் என்பவரது மனைவி பூமிஜா (வயது 28)என்பதும், அவர் நர்சிங் முடித்திருப்பதும் தெரியவந்தது.

    மேலும் அந்த பெண் மீது டவுன் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருந்த விபரமும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இன்று அதிகாலை பூமிஜா வை சந்திப்பு போலீ சார் கைது செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் போலீஸ் நிலையத்தில் முகவரியை மாற்றி கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கைதான பூமிஜாவின் சொந்த ஊர் தேவர்குளம் அருகே உள்ள மூவிருந்தாளி கிராமம் ஆகும். இவர் கடந்த 10 நாட்களாக அங்கிருந்து பஸ்சில் நெல்லை நகர பகுதிக்குள் வந்து கூட்ட நெரிசல் உள்ள பஸ்களில் ஏறி பயணிகளிடம் பிக்பாக்கெட் அடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 10 பர்ஸ்கள், ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×