search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது போதையில் ஏரியில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி பலி
    X

    மது போதையில் ஏரியில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி பலி

    • சேலம் மாவட்டம் கொங்கணா புரம் எட்டிக்குட்டைமேடு, இலவம்பாளையம் கிராமம் அருகே மது போதையில் ஏரியில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி பலியானார்.
    • இது குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கொங்கணா புரம் எட்டிக்குட்டைமேடு, இலவம்பாளையம் கிராமம் அருகே உள்ள நரி பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 32 ). விசைத்தறி தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பழனிசாமி நேற்று தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல், செல்வம் ஆகியோருடன் சேர்ந்து வெள்ளாளபுரம் அருகே உள்ள செங்காடு ஏரி பகுதியில் குளிக்க சென்றார். அங்கு சென்ற நண்பர்கள் அனைவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

    மது போதையில் இருந்த அவர்கள், செங்காடு, தென்கரை மதகுப்பகுதியில் தண்ணீரில் குதித்து விளையாடிய போது பழனிசாமி தவறுதலாக ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். இதில் தண்ணீரில் மூழ்கிய அவர் வெளியே வரவில்லை. இது குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் எடப்பாடி பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் ஏரி பகுதியில் பழனிசாமியின் உடலை நவீன கருவிகளைக் கொண்டு தேடினர்.

    இதனை தொடர்ந்து அப்பகுதியில் நேற்று இரவு மழை பெய்ததால் தண்ணீரில் மூழ்கிய பழனிசாமியை தேடும் பணி உடலை மீட்கும் பணியில் தோய்வு ஏற்பட்டது. தொடர்ந்து இன்று அதிகாலை முதல் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் மீண்டும் பழனிசாமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஆழமான பகுதியில் இருந்து பழனிசாமி உயிரிழந்த நிலையில் அவர் உடல் மீட்கப்பட்டது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த கொங்கணாபுரம் போலீசார், அவர் இறப்பு குறித்து அவருடன் வந்த நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×