search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளர்களின் 12 மணி நேர வேலையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
    X

    தொழிலாளர்களின் 12 மணி நேர வேலையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

    • 8 மணி நேர வேலை என்பதற்குப் பின்னால் ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு உண்டு.
    • தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெரும்பாலான தொழிலாளர்கள் வெகு தூரத்திலிருந்து பணிக்கு வந்து செல்கிறார்கள்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    8 மணி நேர வேலை என்பதற்குப் பின்னால் ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு உண்டு. இதனைத் தொடர்ந்து பெறப்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, சம வேலைக்கு சம ஊதியம், குறைந்தபட்ச ஊதியம், தொழிற்சங்கங்கள் என பல உரிமைகளுக்கு மே தின போராட்டமே விதையாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

    வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்கள் பெற்ற அடிப்படை உரிமையான ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை என்பது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டு வரப்பட்ட சட்ட முன்வடிவின் மூலம் சிதைக்கப்பட்டு இருக்கிறது. தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் பணி நேரம், ஓய்வு, இடைவேளை, கூடுதல் நேரம் போன்றவற்றில் மாற்றம் கொண்டு வர வழிவகை செய்திருப்பது தொழிலாளர்களை துன்புறுத்துவது போல் ஆகும்.

    இதன்மூலம் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு இருக்கின்றன. தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெரும்பாலான தொழிலாளர்கள் வெகு தூரத்திலிருந்து பணிக்கு வந்து செல்கிறார்கள். தற்போது நிலவும் போக்குவரத்து நெரிசலில் தொழிற்சாலைகளுக்கு வந்து செல்லக்கூடிய பயண நேரமே 4 மணி நேரம் ஆகி விடுகிறது. மீதி இருக்கின்ற எட்டு மணி நேரத்தில் தொழிலாளர்கள் எப்படி ஓய்வு எடுக்க முடியும்; குடும்பத்தை எப்படி கவனிக்க முடியும் என்பதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் 'முதலீடு' என்பதன் அடிப்படையில் சட்ட முன்வடிவை நிறைவேற்றியிருப்பது தொழிலாளர்கள் மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

    இதுபோன்றதொரு சட்டத்தை மத்திய அரசு 2020-ம் ஆண்டு இயற்றியபோது அதனை வலுவாக எதிர்த்துவிட்டு, இன்று அதே சட்டத்தை இயற்றியிருப்பது தி.மு.க.வின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டுகிறது.

    Next Story
    ×