அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கார் டிரைவருக்கு கொரோனா

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் கார் டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அமைச்சர் பாதிவழியில் இறங்கி வேறு காரில் ஊர் திரும்பினார்.
கொரோனா வைரஸ் பரிசோதனை
கொரோனா வைரஸ் பரிசோதனை
Published on

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற உறுப்பினரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று திருவண்ணாமலையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் காரில் ஆரணிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது காரை ஓட்டி வந்த டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வந்தது. இதனை தொடர்ந்து அமைச்சர் பாதி வழியில் காரை நிறுத்தி பின்னால் வந்த வேறு காரில் சேவூருக்கு வந்து சேர்ந்தார்.

தொடர்ந்து எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுதா தலைமையிலான மருத்துவ குழுவினர் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.

இதுகுறித்து அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. நேற்று கலெக்டரின் அழைப்பை ஏற்று கொரோனா விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக காரில் தற்காலிக டிரைவரை அழைத்துக் கொண்டு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்.

அந்த டிரைவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்த தகவல் எனக்கு தெரியாது. காரில் வரும்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வந்தவுடன் காரை நிறுத்தி நான் இறங்கி வேறு காரில் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். ஏற்கனவே கடந்த 14-ந் தேதி கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என தகவல் வந்தது. தற்போது மீண்டும் பரிசோதனை செய்து உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாவல்பாக்கத்தில் 24 பேரும், காட்டாம்பூண்டியில் 5 பேரும், கிழக்கு ஆரணியில் 11 பேரும், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், வாணாபுரத்தில் தலா 3 பேர், வந்தவாசியில் 5 பேர், திருவண்ணாமலை நகராட்சியில் ஒருவரும், மேலும் செங்கம், பெரணமல்லூர், தச்சூர், புதுப்பாளையத்தை சேர்ந்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 70 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 9 பேர் சென்னையில் இருந்து வந்தவர்கள். ஏற்கனவே பாதிப்பில் இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள 12 பேர் ஆவர். மேற்கண்ட 70 பேரில் 3 மற்றும் 6 வயது கொண்ட 2 ஆண் குழந்தைகள், 6 வயது பெண் குழந்தையும் அடங்கும்.

இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,492 ஆக உயர்ந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com