கொரோனா வைரஸ்- திருச்சி அரசு ஆஸ்பத்திரி தனிவார்டில் கூடுதல் வசதிகள்

கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருவதால் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

திருச்சி:

திருச்சி புத்தூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி சிறப்பு வார்டு கடந்த மாதம் ஏற்படுத்தப்பட்டது. இந்த வார்டில் முதலில் 8 பேர் ஒரே நேரத்தில் தங்கி சிகிச்சை பெறும் வகையில் படுக்கை வசதி செய்யப்பட்டிருந்தது.

தற்போது இந்த வார்டில் ஒரே நேரத்தில் 30 பேர் வரை தங்கி சிகிச்சை பெறும் வகையில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தினமும் 6 சிறப்பு டாக்டர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள். 10 செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் இங்கு பணியாற்றி வருகிறார்கள்.

கடந்த 30 நாட்களில் இந்த வார்டில் மதுரை, விராலிமலை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 15 வாலிபர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பி சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளில் வேலைக்கு சென்று விமானத்தில் திருச்சிக்கு வந்தவர்களாவர்.

அவர்களுக்கு நோய் அறிகுறியான சளி, காய்ச்சல், இருமல் இருந்ததால் திருச்சி விமான நிலையத்தில் உள்ள மருத்துவக்குழு பரிந்துரையின்படி திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருவதால் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே திருச்சி கே.கே.நகரை சேர்ந்த வாலிபர் ஒருவர் மலேசியாவிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தபோது கொரோனா வைரஸ் அறிகுறியுடன் வந்தார். அவர் திருச்சி சென்னை பை-பாஸ் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் 2 நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். கடந்த 2 நாட்களாக அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நேற்று அந்த வாலிபரை தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இன்று இரண்டாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சளித்தொல்லை அதிகம் இருப்பதாக டாக்டர்கள் கூறினர். சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்புவார் என்று கூறினர்.

கொரோனா நோய் வைரஸ் அறிகுறியுடன் வருபவர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீட்டிற்கு சென்றாலும் அவர்களை தொடர்ந்து ஆஸ்பத்திரி நிர்வாகம் கண்காணிப்பில் வைத்துள்ளது. அவ்வப்போது வந்து ஆஸ்பத்திரியில் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற்று செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நோய் பாதிப்பு யாருக்கும் இல்லை என்றும் பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்றும் மாவட்ட கலெக்டர் சிவராசு கூறியுள்ளார். இருப்பினும் நோய் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். இருமல் வரும் போதும், தும்மல் வரும் போதும் முகத்தை துணியால் மூடிக்கொண்டு தும்ம வேண்டும். கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். சுத்தம் பராமரிப்பு முக்கியம். பொதுமக்கள் அதனை கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com