

சென்னை:
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் தி.மு.க. உறுப்பினர் துரை சந்திரசேகர் பேசும் போது, “மேட்டூர் அணையில் அக்டோபர் 2-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் 5-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆனால் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடைமடை பகுதிக்கு இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை. கதிர் வரும் நேரம். இப்போது ஒரு தண்ணீராவது வந்தால்தான் பயிர்கள் பிழைக்கும். எனவே உடனே மத்திய அரசிடம் முறையிட்டு கர்நாடக அரசிடம் தண்ணீர் பெற வேண்டும்” என்றார்.
அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
காவிரி டெல்டா படுகை மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் கரூரில் நெற்பயிரானது சம்பா மற்றும் தாளடி பருவத்தில் சுமார் 14.93 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகின்றது.
நடப்பு 2017-18-ம் ஆண்டில், சம்பா பருவ சாகுபடிக்காக 2.10.2017 அன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட பாசன நீரைக் கொண்டும், வடகிழக்கு பருவ மழையினைக் கொண்டும், நேரடி நெல் விதைப்பினை ஊக்குவிக்கும் வகையில் 41.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சம்பா தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுப்புத் திட்டத்தினைப் பயன்படுத்தி, இதுவரை 12.83 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதில் 19 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் அறுவடை செய்யப்பட்டும், எஞ்சியுள்ள 12.64 லட்சம் ஏக்கர் பரப்பில், தற்போது சுமார் 4.64 லட்சம் ஏக்கர் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
மீதமுள்ள 8 லட்சம் ஏக்கர் நெற்பயிரில், சுமார் 2.15 லட்சம் ஏக்கர் நிலம் நிலத்தடி நீரினை ஆதாரமாகக் கொண்டுள்ளது. எஞ்சியுள்ள 5.85 லட்சம் ஏக்கர் நெற்பயிரினை முழுமையாக அறுவடை செய்ய 26.75 டி.எம்.சி. நீர் தேவையாக உள்ளது. 3 லட்சம் ஏக்கர் பரப்பிற்கு ஒருமுறை பாசனமும், 2.85 லட்சம் ஏக்கர் பரப்பிற்கு இருமுறை பாசனமும் அவசியமாகிறது.
தற்போது மேட்டூர் அணையில் நீரின் அளவு 21.70 டிஎம்சி ஆக உள்ளது. காவிரி நதிநீர் பங்கீட்டின்படி, கர்நாடக அரசு, ஆண்டுதோறும் தமிழ் நாட்டிற்கு 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். இதுநாள் வரை, 111 டிஎம்சி தண்ணீர் தான் வழங்கியுள்ளது. எஞ்சியுள்ள 81 டி.எம்.சி. தண்ணீர் 2018 மே மாதத்திற்கு முன்பாக வழங்க வேண்டியுள்ளது.
தீர்ப்பாய ஆணையின்படி, தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய மீதமுள்ள நீரைப் பெறுவதற்கு கர்நாடக அரசிடம் நேரடியாகவும், மத்திய அரசு மூலமாகவும், தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தவிர, உச்ச நீதிமன்றத்தின் மூலம் நிவாரணம் பெற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், தற்போது இருப்பில் உள்ள தண்ணீரை கொண்டு, அதிக பாசன நீர் தேவைப்படும் பகுதிகளுக்கு சீராக விநியோகம் செய்து சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரினை முழுமையாக அறுவடை செய்திட சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளேன்.
இருப்பினும், நேற்று இரவு தஞ்சை மாவட்டம், திருவாரூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை பெய்திருக்கின்றது. மேலும், கால்வாய்களில் பகிர்ந்து அளிக்கப்படும் பாசன நீரினை சிக்கனமாக விவசாயிகள் பயன்படுத்திட வேண்டும் என்று இந்த தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
அமராவதியிலே நான்கு அரசாணை வெளியிட்டதாக சொன்னார்கள். நீர் இருக்கின்ற அளவு பொறுத்துதான் தண்ணீர் திறந்துவிட முடியும். அதையெல்லாம் கருத்திலே கொண்டுதான், பெய்கின்ற நீரை அளவாக கொண்டு எந்தெந்த வாய்க்காலில் எவ்வளவு தண்ணீர் விட வேண்டும் என்று முறைப்படுத்தி அதற்கு தக்கவாறு அரசு திறந்து விடுகிறது. விவசாயிகளின் நலன் கருதி இருக்கின்ற நீரினுடைய அளவை வைத்துதான் அரசு அதை வெளியிட்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல, நமக்கு கிடைக்க வேண்டிய நீர் கிட்டத்தட்ட கர்நாடக அரசு 81 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். இந்த மே மாதத்திற்குள். எவ்வளவோ போராடினோம், இன்னும் கிடைக்கவில்லை.
நான் குறிப்பிட்டவாறு அரசு தொடர்ந்து மத்திய அரசின் மூலமாகவும், நேரடியாகவும் கர்நாடக அரசிற்கு அழுத்தம் கொடுத்து கொண்டு இருக்கிறது. உச்ச நீதிமன்றத்திலும் இடைக்கால மனு தாக்கல் செய்தோம்.
இன்னும் நான்கு வாரத்திலே நம்முடைய காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். ஆகவே, அரசை பொறுத்தவரைக்கும் விவசாயிகளுக்கு தண்ணீர் பெற்று தருவதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.