

உத்தரகாண்ட் மாநிலத்தில் தங்களுடைய ராணுவ ஹெலிகாப்டர் பறந்தது, வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதிதான் என சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - சீனா எல்லையை ஒட்டி உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள பாராகோத பகுதியில் நேற்று முன்தினம் சீன ஹெலிகாப்டர் பறந்தது. சுமார் 4 நிமிடங்கள் சீன ஹெலிகாப்டர் இந்திய எல்லைக்குள் பறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘எந்த ஒரு அனுமதியும் பெறாமல் இந்திய எல்லைப்பகுதிக்குள் ஹெலிகாப்டர் வந்து உள்ளது அத்துமீறல். உள்ளூர் உளவுத்துறையும் அத்துமீறலை கண்டறிந்து உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக இந்தோ - திபெத் எல்லை காவல் படையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டுள்ளது’ என்று மாநில போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்தியா - சீனா இடையே உள்ள எல்லைகளில் இது போன்ற சில பிரச்சனைகள் இருப்பதாக தெரிவித்துள்ள சீனா வெளியுறவு செய்தி தொடர்பாளர், வழக்கமான எல்லை பாதுகாப்பு பணியில் தான் ராணுவம் ஈடுபட்டது என தெரிவித்துள்ளார். மேலும், ராணுவ ஹெலிகாப்டர் பறந்தது தற்செயலான நிகழ்வுதான் என்றும் தெரிவித்துள்ளார்.