

மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கும்ப்ளே பதவி காலம் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் முடிகிறது. இந்த நிலையில் புதிய பயிற்சியாளர் தேர்வுக்கு வரவேற்கப்படுகின்றன என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. பயிற்சியாளர் தேர்வில் கும்ப்ளேயும் பங்கேற்கலாம் என்று தெரிந்தது.
இதற்கிடையே கேப்டன் விராட் கோலிக்கும், பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தான் கும்ப்ளே பதவி காலத்தை நீட்டிக்காமல் புதிய பயிற்சியாளர் தேர்வு அறிவிப்பு வெளியானது என்று தகவல்கள் வந்தது.
சாம்பியன்ஸ் கோப்பை போட்டி நடைபெறும் இந்த நேரத்தில் கோலி- கும்ப்ளே விரிசல் அணியை பாதிக்கலாம் என்று கிரிக்கெட் வாரியம் கருதுகிறது.
இதையடுத்து இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் கிரிக்கெட் வாரியம் இறங்கி உள்ளது. கிரிக்கெட் வாரிய செயலாளர் அமிதாப் சவுத்ரி, பொதுமேலாளர் ஸ்ரீதர் ஆகியோர் இங்கிலாந்து சென்று கும்ப்ளே, விராட் கோலியை சந்தித்து பேசுவார்கள் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய பயிற்சியாளர் தேர்வில் கும்ப்ளேயும் பங்கேற்கலாம் என்று கிரிக்கெட் வாரியம் கூறியுள்ள போதிலும் அதில் கும்ப்ளே பங்கேற்கமாட்டார் என்று தெரிகிறது.
பதவி காலத்தை நீட்டிக்காமல் புதிய பயிற்சியாளர் தேர்வை நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டதால் தன்னை நீக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கும்ப்ளே கருதுகிறார் என்றும் அதனால் பயிற்சியாளர் தேர்வில் பங்கேற்க விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவமானத்தை தவிர்க்க பயிற்சியாளர் பதவி நீட்டிப்பை அவர் எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.