

சென்னை:
தமிழகத்தில் 2 கோடியே ஒரு லட்சம் அரிசி ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுகள் முன்னுரிமை, முன்னுரிமையற்றவை என வகைகப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி 80 லட்சம் முன்னுரிமை கார்டுகளில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் மாதம் தலா 5 கிலோ இலவச அரிசியும், முன்னுரிமையற்ற ஒரு கோடியே 2 லட்சம் கார்டு தாரர்களுக்கு அதிகபட்சம் 20 கிலோ இலவச அரிசியும் வழங்கப்படுகிறது.
மிகவும் ஏழைகளாக உள்ள 19 லட்சம் முன்னுரிமை அந்தியோதையா அன்ன யோஜனா கார்டுகளுக்கு அதிகபட்சம் 35 கிலோ இலவச அரிசியும் வழங்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு ரேஷனில் கூடுதல் அரிசி வழங்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மத்திய அரசு பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அந்தியோதையா மற்றும் முன்னுரிமை கார்டுகளுக்கு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நபர் ஒருவருக்கு கூடுதலாக தலா 5 கிலோ அரிசி வழங்க உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவை ஏற்று தமிழகத்தில் அன்னயோஜனா கார்டு தாரர்களுக்கு 35 கிலோ அரிசியுடன் ஒரு கார்டில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனரோ அத்தனை பேருக்கும் கூடுதலாக தலா 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.
அதேபோல முன்னுரிமை கார்டுதாரர்களுக்கும் நபர் ஒருவருக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும். அதற்கு ஏற்ற வகையில் மே மாதம் ரேஷனில் வழங்க 5.89 லட்சம் டன் அரிசி, 13 ஆயிரத்து 485 டன் கோதுமை ஒதுக்குமாறு வாணிப கழகத்துக்கு உத்தர விடப்பட்டுள்ளது. இந்த பொருட்களை வருகிற 30-ந்தேதிக்குள் கடைகளுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.